சிக்கன் விரும்பிகளே…! உங்கள் ஊரிலும் நடக்கலாம்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை என்ற பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள் காவல்துறையினர். அப்போது அவ்வழியே வந்த கணேசன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது, கணேசன் வைத்திருந்த மூட்டையில் சுமார் 15 உயிரிழந்த கோழிகள் இருந்ததைப் பார்த்திருக்கிறார்கள் காவலர்கள். அதுபற்றி  அவரிடம் விசாரித்தபோது, பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அவர், பல்லடம் சுற்றுவட்டார ஓடைப் பகுதிகளில் வீசியெறியப்படும் உயிரிழந்த கோழிகளை சேகரித்து, திருப்பூரில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார். அவரைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

,

விஷயமென்னவென்றால் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியானது கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி பண்ணைகள் அதிகம் நிறைந்த பகுதி. இங்குள்ள பண்ணைகளில் வளர்ப்பின்போதே பல்வேறு காரணங்களால் இறந்துபோகும் கோழிகளை, பண்ணை உரிமையாளர்கள் சிலர் அருகிலுள்ள நீர்நிலைகளில் வீசியெறிந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி பொதுவெளியில் வீசியெறியப்படும் கோழிகள் அனைத்தையும் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு சிலர் எடுத்துச் சென்று, அந்த கோழிகளில் உள்ள கழிவுகளை மட்டும் நீக்கி, இறைச்சிகளை வெட்டி கடைகளுக்கு விற்பனை செய்வதை ஒரு மறைமுக வியாபாரமாக உருவாக்கிவிட்டார்கள். திருப்பூர் மாநகரில் இப்படியான செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் இங்கு குறைந்தபாடில்லை.

இதுபோன்ற செயலுக்கு காவல்துறையைச் சேர்ந்த ஒரு சிலரும் துணைபோகிறார்கள். சாலையில் வீசியெறியப்படும் இறந்த கோழிகளை எடுத்து வைத்து வியாபாரம் நடத்துவதற்கு கோழிப்பண்ணை உரிமையாளர்களும், டாஸ்மாக் பார் உரிமையாளர்களும் காவல்துறைக்கு ஒரு கமிஷனை வெட்டிவிடுகிறார்கள்.கமிஷன் முறையாக செல்லாத நேரத்தில், ஆள் கணக்கு காண்பிப்பதற்காக மட்டும் யாரேனும் சிலரைப் பிடித்து சிறையில் வைத்து அனுப்புவதெல்லாம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான டாஸ்மாக் பார்களும், சாலையோர இறைச்சிக் கடைகளும், ஏன் குளிரூட்டப்பட்ட அசைவ உணவகங்களிலும் கூட இப்படி நோய்வாய்பட்டு இறந்தபோன கோழிகளை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிவருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். தீவிர நடவடிக்கை மூலம் இதைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.