`அருணகிரி நாதர் மதுரை ஆதீன மடத்தைவிட்டு வெளியேற வேண்டும்!’’ இளைஞர் சேனா அமைப்பு

”மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு எதிராக இந்து இயக்கங்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

மதுரை ஆதினம்

”நீண்ட காலமாக மதுரை ஆதினமாக இருந்துவரும் அருணகிரிநாதர் பற்றி புகார்களை கூறி வருகிறோம். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். இந்து மதத்தை இழிவாக பேசும் நபர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். சமீபத்தில் இந்து கோயில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்ன திருமாவளவனை மடத்தில் சந்திக்கிறார். ஜவாஹிருல்லா, சீமான் போன்றவர்களை பாராட்டுகிறார். மாட்டுக்கறிக்கு ஆதரவாக பேசுகிறவர்களை மடத்துக்கு அழைத்து மரியாதை செலுத்துகிறார். மீனாட்சியம்மன் கோயிலில் தீப்பிடித்த செய்தி கேட்டு பல ஆன்மீகத்தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள். ஆனால், அருகிலிருக்கும் இவர் இதுவரை செல்லவில்லை.

சோலைகண்ணன்

திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட பெருமை மிகுந்த  ஆதினமடத்தை  நாசப்படுத்திவிட்டார். திராவிடக் கட்சிகளோடு நெருக்கம் காட்டும் அருணகிரிநாதர், 1975 ஆம் ஆண்டு இளையஆதினாமாக உள்நுழைந்து, சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆதினம் சோமசுந்தர சுவாமிகளின் மறைவுக்கு பிறகு ஆதினமாக வந்தார். இவருடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது மறைந்த ஆதினம் மரணத்தில் கூட சந்தேகம் ஏற்படுகிறது. இவருடைய நடவடிக்கைள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் சராசரி மனிதரைப் போலவே உள்ளது. கடந்த காலங்களில் இவர் ஆதின மடத்துக்குள் செய்த அனைத்து விவகாரங்களும் மக்களுக்கு தெரியும். ஆதின சொத்துக்கள் மூலம் கிடைக்கும் பலகோடி ரூபாய் வருமானத்தைத் தனது இஷ்டத்திற்கு ஏற்றார்போல் செலவழித்து வரும் அருணகிரிநாதர் மீது, அறநிலையத்துறை தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதனால்தான் சமீபத்தில் அறநிலையத்துறையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். தற்போது சைவம் வைணவம் மட்டும்தான், இந்து என்ற மதம் இல்லை என்று கூறி வருகிறார். இப்படி இந்து மடாதிபதி என்ற போர்வையில் இருந்துகொண்டு இந்துக்களுக்கு எதிராகவும், இழிவுபடுத்தும் விதத்திலும் நடந்து கொள்கிறவரை எதிர்த்தும், அறநிலையத்துறையை எதிர்த்தும் வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக ஆதின மடத்தைத் தொடர்பு கொண்டபோது, ”ஆதீனம் பூஜையில்  இருக்கிறார், நான்கு நாள்களுக்கு தொடர்பு கொள்ள முடியாது”  அவருடைய உதவியாளர் கூறினார்.