மும்பை விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பெரும் விபத்து சில வினாடிகளில் தடுக்கப்பட்டதால் இரு விமானத்திலும் இருந்த சுமார் 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடந்த புதன் கிழமை விஸ்டாரா விமானம் மும்பை விமானநிலையத்தின் மேல் சற்று தாழ்வாக பறந்தது.
அந்நேரத்தில் அதற்கு நேராக ஏர் இந்தியா விமானம் வானத்தை நோக்கி புறப்படும் போது இரண்டும் வானில் மோதிகொள்ளும் நிலை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் சில வினாடிகளில் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து DGCA எனும் பொது சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விஸ்டாரா விமானத்தின் இரு விமானிகளையும் விசாரணைக்கு அழைத்தது.
அப்போது விமானிகளுக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கொடுத்த சமிஞைகளை கவனத்தில் கொள்ளாமல் 2700 அடி உயரத்தில் பறந்ததே பெரும் விபத்து நிகழ காரணமாகியிருக்கும் என தெரியவந்தது.
டெல்லியில் இருந்து புனே சென்ற விஸ்டாரா விமானம் 29000 அடி உயரத்தில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கவனக்குறைவாக 27100 அடி உயரத்தில் பறந்ததால் இந்த விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இரு விமானமும் ஒன்றை ஒன்று வானில் கடந்து செல்லும் போது இரண்டுக்கும் இடையில் செங்குத்தாக வெறும் 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. அந்த நேரத்தில், (T.C.A.S) எனும் போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பின் அலாரங்கள் விமானங்கள் இரண்டிலும் ஒலிக்கப்பட்டதால் விமானிகள் சூழலை உணர்ந்து விபத்தை சில வினாடிகளில் தவிர்த்தனர்.
”எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களுக்கு முக்கியம் , விஸ்டராவில் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் வழிகாட்டு நெறிகளையும் நாங்கள் கவனமாக பின்பற்றுகிறோம்” என விஸ்டாரா விமான நிறுவனத்தின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
”உண்மையில் மிக குறுகிய நேரத்தில் அலாரம் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் விஸ்டாரா விமானிகளுக்கு இடையே இருந்த குழப்பம் தான் இந்த சூழலுக்கு காரணம்” என ஏர் இந்தியா விமானத்தின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.