தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசலில் முட்டி காளை பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் தென்னூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையான கொம்பனும் கலந்து கொண்டது.
யாருக்கும் அடங்காத காளையான கொம்பன், களத்தில் இறங்கியவுடன் அதை பிடிக்க வீரர்கள் தயார் நிலையில் இருந்தபோது எதிர்பாராத விதமாக வாடிவாசல் கல்தூணில் முட்டி கீழே விழுந்தது.
மயக்கம் அடைந்த காளையை பரிசோதித்த மருத்துவர்கள் காளை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
கலந்துகொண்ட எந்த போட்டியிலும் யாருக்கும் அடங்காத காளையாக வலம் வந்துகொண்டிருந்த கொம்பனின் மரணம் ஜல்லிகட்டு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இறந்த காளையை அமைச்சரின் தோட்டத்தில் புதைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.