பக்கச்சார்பின்றி சேவையாற்ற வேண்டும்: மட்டு.அரச அதிபர்

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை உணர்ந்து தூய்மையான வகையிலும் பக்கச்சார்பற்ற வகையிலும் மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி தேர்தலுக்கான பிரதான அலுவலகத்தின் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சிமன்றங்களுக்குமான தேர்தல் சுமுகமான முறையில் நடைபெற்றுமுடிந்துள்ளது.

புதிய முறையில் நடைபெற்ற இந்த தேர்தலை உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு தரப்பினரும் சிறப்பான முறையில் எதிர்கொண்டு நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.55மணியளவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான பிரதிபலன்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த தேர்தலை சுமுகமாக நடாத்துவதற்கு பலர் பல வழிகளிலும் உதவியிருந்தனர். 4443 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

1900பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் விசேட அதிரடிப்படையிரும் முப்படையினரும் பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். விசேடமாக ஊடகவியலாளர்கள் தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று அவர்களை அறிவூட்டியதுடன் சுமுகமான முறையில் வாக்களிக்க தூண்டியதற்காகவும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று எமது செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,செயலாளர்கள், சுயேட்சை குழு ஆகியனவற்றுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.