“என்னை நடிக்கச் சொன்னது மாதவன் தான்!”- போலி ஐ.டி. அதிகாரி

சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கடந்த 10-ம் தேதி காலை ஒரு தகவல் பரவியது. சிறிது நேரத்தில் அங்கு போலீஸார் விரைந்தனர். பத்திரிகையாளர்களும் குவிந்தனர். தீபா வீட்டுக்குள் போலீஸார் சென்றதும் வருமான வரித்துறை அதிகாரி என்று வீட்டில் நுழைந்த அந்த நபர் பின்வழியாக ஓடிவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தப்பிய அந்த நபர் பற்றி மேற்கொண்டு விவரம் தெரியவில்லை. இதனால், போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி அதிகாரி பிரபு என்ற பிரபாகரன் நேற்றிரவு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தான் நிரபராதி என்றும், தன்னை படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி தீபாவின் கணவர் மாதவன்தான் தீபாவின் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். வருமான வரித்துறை அதிகாரி போன்ற போலி ஐ.டி கார்டு, சோதனை வாரன்ட் என அனைத்தையும் தீபாவின் கணவர் மாதவனே போலியாக தயாரித்து கூரியரில் அனுப்பி வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார். தீபாவின் ஆதரவாளர்கள், மாதவனின் ஆதரவாளர்கள், இரு தரப்பு வழக்கறிஞர்களும் காவல் நிலையத்தில் குவிந்துள்ளனர்.