அரசாங்கத்திற்கு மகிந்த சவால்…

அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தால் பொதுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சவால் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இந்த சவாலை முன்வைத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,

உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தில் ஒரு தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலை நாட்டுக்கு நல்லதல்ல.

எனவே உறுதியான அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டுமாயின் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று நான்கு வருடங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

ஆயினும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் குறித்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அரசாங்கம் அதனை செய்து நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை அறிவிப்பதே பொருத்தம்.

அவர்கள் தான் தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். எனவே அவர்கள்தான் மக்களின் ஆணைக்காக தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயாரில்லை. பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமாக ஆட்சியைப் பிடிப்பதே எமது இலக்காகும்.

சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டே நான் இன்னொரு கட்சியின் வெற்றிக்காக உழைக்கவில்லை. அதே நேரம் பொதுஜன பெரமுண கட்சியின் தலைவரும் நானல்ல, கட்சியின் தலைவர் வேறொருவர். ஆனால் சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைத்தவர் மைத்திரி தான்.

தேர்தலில் எமது கட்சி 45 வீத வாக்குகளை மட்டும் பெற்று கடந்த தேர்தல்களை விட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அரசாங்கம் வலுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது அவரது கனவு மட்டுமேயாகும் என்றும் மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.