ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை செய்ய வந்தவர் பொலிசில் சரணடைந்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை தி.நகரில் இருக்கும் தீபாவின் வீட்டுக்குள் மித்தேஷ்குமார் என்ற பெயரில் போலி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் நுழைந்து சமீபத்தில் பரபரப்பை கிளப்பினார்.
அவர் மீது சந்தேகமடைந்து பொலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.
மித்தேஷ்குமார் யார்? இவர் ஏன் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தார் என பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரே பொலிசில் தற்போது சரணடைந்துள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவன் கொடுத்த ஐடியா படிதான் தாம் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, மாதவனுக்கும் தனக்கும் நட்பு இருப்பதாகவும், தீபாவிடம் பணம் பறிப்பதற்காக மற்றும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மாதவன் தன்னை வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க சொன்னதாகவும் மித்தேஷ்குமார் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்து மாதவன் தலைமறைவாகியுள்ளார்.
அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.