பொன்வண்ணன் இயக்குநர், நடிகர், சிறுகதை எழுத்தாளர், ஓவியர்… எனப் பன்முக ஆளுமை கொண்டவர். தேடித் தேடிப் புத்தகங்களை வாசிப்பவர். அவர் தனக்கு மனஅழுத்தம் ஏற்படுத்திய சம்பவங்களையும், அவற்றை எப்படிக் கடந்தார் என்பதையும் விளக்குகிறார் இங்கே…
“மனஅழுத்தம்ங்கிறது வேற, சாதாரண டென்ஷன்ங்கிறது வேற. அதாவது, சின்னச் சின்ன சம்பவங்கள் மூலமா நமக்கு டே டு டே லைஃப்ல ஏற்படுறது டென்ஷன். ஆனா, வாழ்க்கையில எதிர்பாராத சம்பவங்களால ஏற்படுறது மனஅழுத்தம். அந்த மாதிரி மனஅழுத்தம் தர்ற சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு.
முதன்முதலா 1990-ம் வருஷம்நான் டைரக்ட் பண்ணின படம் ‘அன்னை வயல்.’ அந்தப் படம் முழுசா முடிஞ்சு வெளிவருகிற சமயத்துல எனக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையில பிரச்னை ஏற்பட்டுச்சு. அதன் பிறகு, அந்தப் படம் வெளிவந்தபோது, போஸ்டர்லகூட என்னோட பெயரே போடலை. ‘அன்னை வயல்’ ரீலிஸானப்போ, அதை நான் தியேட்டர்லகூடப் போய்ப் பார்க்கலை.
தேனாம்பேட்டையில் இருந்த என்னோட ரூம்ல, எந்த டென்ஷனும் இல்லாம, ரஷ்ய நாவலான ‘சாவுக்கே ஒரு சவால்’ என்னும் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சாதாரண ஒரு நாளைப்போலத்தான் அந்த நாளும் கடந்துபோனது.
வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி, திரைப்படத் துறையின் உயரத்துக்குப் போய், ‘டம்’முன்னு உச்சத்துல இருந்து கீழே விழுந்த நாள் அது. அந்த நாளையே நான் சாதாரணமாகத்தான் கடந்தேன்.
அதுக்குப் பிறகு சினிமா, சீரியல்னு பிஸியான நடிகனாகி, மக்கள் மனதில் எனக்குனு ஒரு இடத்தையும் பிடிச்சேன். அதன் மூலமா எனக்குப் பல நல்ல நண்பர்கள்னு வாழ்க்கையை அதன் போக்கிலேயே வடிவமைச்சேன்.
வெகுநாள்களுக்குப் பிறகு 2004-ம் வருஷத்துல திரும்பவும் ‘கோமதிநாயகம்’ங்கிற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைச்சுது. அது மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப் படம். அதைத் தமிழ்ல ரீமேக் பண்ணினோம்.
ஹீரோவுக்கு மத்தியதர வயதிலிருக்கும் ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் எனக்குச் சரியா இருக்கும்னு தோணிச்சு. அரோமா மணிங்கிற மலையாளப் படத் தயாரிப்பாளர்தான் தயாரிச்சார்.
படம் அதற்குண்டான பட்ஜெட்ல மிக நேர்மையாக உருவாக்கப்பட்ட படம். ஆனா, படம் ரீலிஸான அன்னிக்கு, உலகையே சுழற்றிப்போட்ட சுனாமி. அதன் களேபரங்கள் அடங்கவே பல நாள்கள் ஆனது. அப்போதும் நான் வாழ்க்கையையும் அதன் நிகழ்வையும் சாதாரணச் சம்பவமாகத்தான் பார்த்தேன். ‘ஐயய்யோ… நம்ம படம் ரிலீஸான நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே’னு ஒரு சின்ன புலம்பல்கூட நான் புலம்பலை.
பலர் தங்களின் உயிர்களை, உடைமைகளை, வாழ்வாதாரங்களை இழந்திருந்த நேரம் அது. பெரு நெருப்பில் சிறு பொறியாக என் துன்பத்தை நினைத்தேன்” என்றவரிடம், ‘`இந்த மனோபாவம் உங்களுக்கு எப்படி வந்தது?’’ எனக் கேட்டோம்.
நான் படிச்ச புத்தகங்கள்தான் இந்தப் பக்குவத்தை எனக்குத் தந்தது. நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே பாடப் புத்தகங்களோட, வேற புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்.
சொன்னா நம்ப மாட்டீங்க… எங்க ஊர் லைப்ரரியில கிடைத்த ‘சரத் சந்திரர்’, ‘காண்டேகர்’, ‘பக்கிம் சந்திர சாட்டர்ஜி’ போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் நாவல்களை எனது ஒன்பதாம் வகுப்பிலேயே வாசிச்சுட்டேன். அந்தப் புத்தகங்களை யாரும் எடுத்திருக்க மாட்டாங்க. லைப்ரரிக்குள் போனதும் கிடைச்சுடும்.
சென்னை வந்ததும், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்குப் போய் மார்க்ஸிய, லெனினிய நூல்களை வாசிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல நம்ம ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ வெளியிட்டிருந்த எல்லாப் புத்தகங்களையும் வாசிச்சுட்டேன். அந்தப் புத்தகங்கள் உலக வாழ்க்கையையும் மனித மாண்புகளையும் வாழ்வியலையும் எனக்குக் கற்றுத் தந்தன.
அரசியல், சினிமா, சாதாரண வாழ்க்கை, விவசாயம், இது பற்றியெல்லாம் நண்பர்களுடனும் பாமரர்களுடனும் மனம்விட்டு விவாதிப்பேன். நம்மைவிட வயதில் மூத்தவர்கள் தந்த அனுபவப் பாடம், புத்தகங்கள் தந்த மனப்பக்குவம்… இதெல்லாம் என் மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திச்சு.
அடிப்படையில எங்க குடும்பம், விவசாயக் குடும்பம். என் அப்பா பொன்னுசாமிக்கு விவசாயம்தான் உயிர். வயல்தான் உலகம். நாளும் நிலத்துல கஷ்டப்பட்டுப் பாடுபடுவார்.
ஏகப்பட்ட கடனை வாங்கிப்போட்டு, முட்டுவளிச்செலவு செய்து, பயிரை விளைவிப்பார். அப்புறம் நல்ல மழை இல்லாம காய்ஞ்சு போய், வெளைஞ்ச நிலத்துலேயே மறுபடியும் ஆடு மாடுகளை மேய்க்கவிட வேண்டி வரும். மாடு பிரசவ நேரத்தில் இறந்து போகும். ஆனாலும், அப்பா மனம் தளராம திரும்பத் திரும்ப போராடிக்கிட்டே இருப்பார். ஒருநாளும் அலுத்துக்கிட்டதே இல்லை. இப்படி என் சிறுவயதிலேயே ஏகப்பட்ட துன்பங்களைப் பார்த்திருக்கேன். அவருடைய அந்த மனோபலம் எனக்கு இயல்பிலேயே இருந்துச்சு.
அதனால, வாழ்க்கைங்கிறது பல சம்பவங்களின் தொகுப்பு. வாழ்க்கையில ஒரு சம்பவம் மிஸ் ஆகியிருக்கு. அவ்வளவுதான். ஒருவேளை அந்தச் சம்பவம் நடந்திருந்தா அது ப்ளஸ்ஸைவிட மைனஸாகவும் ஆகியிருக்கலாம்.
வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட இரண்டு சம்பவங்கள்… அந்த இரண்டையுமே நான் ஈஸியா எடுத்துக்கிட்டு கடந்ததாலதான் அடுத்தடுத்த ஸ்டேஜுக்கு என்னால போக முடிஞ்சுது. எந்த இடத்துல நான் பதற்றம் ஆவேன்னா, யாரையாவது கோபத்துல திட்டிட்டேன்னா, மனசு புண்படும்படி பேசிட்டேன்னா பதற்றமாயிடுவேன்.
திரும்ப அவங்கக்கிட்ட, ‘ஸாரி’ கேட்டு, அவங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணினாத்தான் மனம் சமாதானம் ஆவேன். அது ஒரு நல்ல பழக்கம்ங்கிறதுல அப்படியே விட்டுட்டேன். அதனால யாரையும் திட்டாம இருக்கணுமேங்கிற நினைப்பு என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கும்” எனச் சிரித்த முகமாகச் சொல்கிறார் பொன்வண்ணன்.