காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே, இளைஞர் ஒருவரின் தலையை வீசிச் சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, காட்டாங்கொளத்தூர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை சர்வீஸ் ரோட்டில் உள்ள குப்பையில் வீசினார்கள். அந்தக் கவரில் இருந்த மனிதத் தலை ஒன்று உருண்டு வெளியே வந்து வீழ்ந்தது. இதைப் பார்த்ததும், அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள், அருகில் உள்ள மறைமலைநகர் காவல்துறையினருக்குத் தகவல்கொடுத்தனர்.
அந்தத் தலையில் உள்ளவரின் முகம் தெளிவாகத் தெரிவதால், அவர் கோனாதி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவராக இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். உடனே அந்தத் தலையை மறைமலைநகர் காவல்துறையினர் கைப்பற்றி, விசாரணைசெய்து வருகிறார்கள். அவரது உடல் எங்கே இருக்கிறது என்பதும், கொலைசெய்தவர்கள் யார் என்பதும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பழிக்குப்பழி கொலைகள் அதிகம் நடக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், தலையைச் சிதைத்து கொலைசெய்வது வழக்கம். ஆனால், தலையை மட்டும் துண்டித்துள்ளது, இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.