அரசு வேலைக்காக அப்பாவைக் கொல்ல கூலிப்படையினருடன் மகன், திட்டமிட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், போலீஸாரே, வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடி போலீஸாருக்குத் தலைவலியை ஏற்படுத்திய பினுவைக் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பினு மற்றும் அவரின் கூட்டாளிகளைத் தேடிவரும் போலீஸாருக்கு, பூந்தமல்லி பகுதியில் ரவுடிக் கும்பல் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீஸார் அந்த ரவுடிக் கும்பலை சுற்றி வளைத்தது. அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், கார், பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸாரிடம் சிக்கியவர்கள், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவுடிகளான ஜோஸ், செல்வக்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரி சுதாகர், அவரது நண்பர் விவேக் ஆகியோர் என்று விசாரணையில் தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீஸார் நான்கு பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைப் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதாகர், விவேக். இவர்கள், இருவரும் நண்பர்கள். விவேக்கின் அப்பா, சென்னை நசரேத்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார். அம்மா, சென்னைக் குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவர். விவேக், எம்.சி.ஏ. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள பிரபலமான கம்பெனியில் பணியாற்றினார். விவேக்கிற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால், கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் விவேக் சிரமப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நண்பன் சுதாகரிடம் தெரிவித்துள்ளார் விவேக். இதையடுத்து இருவரும் வழிப்பறி செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.
சுதாகருக்கு அறிமுகமான நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜோஸ், செல்வக்குமார் மூலம் வழிப்பறி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நெல்லையிலிருந்து சென்னைக்கு ஜோஸ், செல்வக்குமார் வந்துள்ளனர். இவர்கள் இருவர்மீது நெல்லை மாவட்டத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் சென்னை பைபாஸ் சாலையில் வழிப்பறி செய்து அந்தப் பணத்தின் மூலம் கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் ஜோஸ், செல்வக்குமார், சுதாகர், விவேக் ஆகிய நான்குபேரைக் கைதுசெய்துள்ளோம் என்றார்.
இதற்கிடையில் ரவுடிகள் ஜோஸ், செல்வக்குமார் மூலம் இன்னொரு திட்டத்தையும் நடத்த விவேக் திட்டமிட்டிருந்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், விவேக்கின் அப்பா, குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், விவேக்கிற்குத் திருமணம் நடக்கவில்லை. மேலும், நிரந்தர வேலை இல்லாமல் அவர் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. விவேக்கின் நிலைமையைப் பார்த்த சென்னை மாநகராட்சி அதிகாரி சுதாகர், ரவுடிகள் ஜோஸ், செல்வக்குமார் மூலம் உன்னுடைய அப்பாவைக் கொலை செய்தால் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும் என்று விவேக்கிடம் சொல்லியதாகவும் தெரிகிறது. இதற்காகத்தான் நெல்லையிலிருந்து ரவுடிகள் சென்னைக்கு வந்ததாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், அந்தத் தகவலை போலீஸார் மறுத்துள்ளனர்.
எப்படியோ நண்பனுக்காக சென்னை மாநகராட்சி அதிகாரியான சுதாகர், சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். வழிப்பறி செய்து கடனை அடைக்கலாம் எனக் கருதிய போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த விவேக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.