யாழ். மாநகரசபை மேயர் யார்?

யாழ். மாநகரசபை மேயர் தெரிவில் இழுபறி நிலை தோன்றியுள்ளது.

யாழ். மாநகரசபை மேயர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் காலத்திலேயே அந்த கருத்து வாபஸ் வாங்கப்பட்டிருந்தது.

இதன் பின்பு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மாநகரசபைக்கான மேயர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் நிலவரம் சூடு பிடித்துள்ளது.

அதனடிப்படையில் யாழ். மாநகரசபை மேயராக ஆர்னோல்ட்டை தெரிவு செய்ய வேண்டாம் என கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் எடுத்து கூறியுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்னோல்ட்டை யாழ். மேயர் வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உடன்பாடில்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சமூக சேவகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சொலமன் சிறிலை நியமிக்க வேண்டுமென்ற கருத்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பிறகட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைமைகள் ஆகியோரிடம் மேலோங்கியுள்ள சூழலில் யாழ். மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக கவனத்தை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படலாம் என கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட தலைவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.