அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளனர்.
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65).
இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் மூலம் பல முக்கியமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் வெய்ன்ஸ்டீன் பட நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களை பல ஆண்டுகளாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஹார்வி வெய்ன்ஸ்டீன், அவரது நிறுவனம் மற்றும் ஹார்வியின் சகோதரரும், நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியுமான பாப் வெய்ன்ஸ்டீன் ஆகியோர் மீது நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சினீடர்மென் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரக்கோரியும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.