இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம், தமிழ் மக்களின் அவலநிலை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் அவலநிலையை எடுத்து கூறும் வகையில் “சாட்சிகள் சொர்க்கத்தில்” என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் உயிரிழப்பை கருவாகக்கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குனர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக்கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.
ஈழத்தில் நடந்த கற்பழிப்பு காட்சிகளோ, கொலை கட்சிகளோ, துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும், வலியையும் அடக்கியுள்ளாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட்டுள்ள, இந்த திரைப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரையுலகத்தினரால் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசைவெளியீட்டு விழா மாசிமாதம் 25ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஈழத்தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது.
ஈழத்தமிழர்களின் வலிகள் இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஈழன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.