சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க பிறந்தநாளில் சபதம் எடுத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களாகச் சென்னை போலீஸாரின் தூக்கத்தைக் கெடுத்த பிரபல ரவுடி பினு, இன்று போலீஸில் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் ஆவடி சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் பினுவிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், பிறந்தநாளின்போது தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க, பினுவும் அவரது கூட்டாளிகளும் சபதம் எடுத்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘கேரளாவைச் சேர்ந்த பினு, சென்னையில் பிரபல ரவுடியாக உருவெடுத்தார். கடந்த 97-ம் ஆண்டு முதல் கொலை, ஆள்கடத்தல், அடிதடி எனப் பல வழக்குகள் பினு மற்றும் அவரது கூட்டாளிகள்மீது உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்த பினு, அதன்பிறகு தலைமறைவாகிவிட்டார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பினு, சில தினங்களுக்கு முன் சென்னை மாங்காடு அடுத்துள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் வெகுவிமரிசையாகக் கூட்டாளிகளுடன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்தத் தகவல் கிடைத்ததும், பினு மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க சென்னை போலீஸார் வியூகம் அமைத்தனர். நள்ளிரவில் நடந்த அதிரடி ஆபரேஷனில் பினு, கனகு, விக்கி மற்றும் சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால், ஒரே நாளில் 72 ரவுடிகளை போலீஸார் பிடித்தனர்.
பினுவைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிவந்தார். பினு, தலைமறைவாக இருக்கும் இடத்துக்குச் சென்ற போலீஸார், ஏமாற்றத்துடனே திரும்பிவந்தனர். இதனால், பினுவை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை போலீஸார், கடந்த 8 தினங்களாகத் தூக்கத்தைத் தொலைத்தனர். போலீஸாரின் தீவிரத் தேடுதலால் உயிருக்குப் பயந்த பினு, அடுத்து என்ன செய்யலாம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பினுவுக்கு நெருக்கமான சில போலீஸ் உயரதிகாரிகளும் வழக்கறிஞர்கள் டீமும், ‘தற்போது நிலைமை சரியில்லை. இதனால், சரண் அடைவதே நல்லது’ என்று பினுவுக்கு அறிவுரை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சரண் அடையும் முடிவை பினு எடுத்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். முக்கிய பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில் தனிப்படை போலீஸாரிடம் நேற்றிரவு சரண் அடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆவடி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில், உதவி கமிஷனர் ஒருவர் பினுவிடம் நீண்ட நேரம் விசாரித்துள்ளார். அப்போது, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சதித்திட்டம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. போலீஸாரின் கேள்விகளுக்குப் பினு அளித்த பதில்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பினுவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். ரகசிய இடத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று முற்பகல், அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு, போலீஸ் உயரதிகாரிகள் பினுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு, பினுவை எப்படிக் கைதுசெய்தோம் என்பதை போலீஸார் மீடியாக்களிடம் விரிவாகத் தெரிவிக்க உள்ளனர்.
பினுவிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக பினு, தமிழகத்தில் இல்லை. கேரளாவில் இருந்தபடியே கூட்டாளிகள்மூலம் அசைன்மென்ட்களை முடித்துவந்துள்ளார். அவரது கூட்டாளிகளுக்கும் பினுவின் வலதுகரமாக இருந்து, தற்போது எதிரியாக மாறிய இன்னொரு ரவுடிக் கும்பலுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளளது. ரவுடிகள் சாம்ராஜியத்தில் முதலிடமும் பினுவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் முதலிடத்துக்கு வர பினுவின் பிறந்தநாளில் அவரது கூட்டாளிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர். மேலும், எதிரிகளைக் கூண்டோடு அழிக்கவும் முதலில் சென்னை சிட்டியைக் கலக்கிவரும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஒருவரையும் கொலைசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சபதங்களை எடுத்த பினு மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் கேக் வெட்டி மது விருந்தில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், பினு பிறந்தநாள் கொண்டாடிய தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், ஒரே நாளில் 72 ரவுடிகளைக் கைதுசெய்துவிட்டோம். தப்பி ஓடிய பினு, கனகு, விக்கி ஆகியோரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், பினு எங்களிடம் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து பினுவிடம் விசாரணை நடந்துவருகிறது’ என்றார்.