பணி முடிந்து வீடு திரும்பிய சென்னை ஐ.டி ஊழியரின் செல்போன், நகை, டூவீலர் ஆகியவற்றை பறித்ததோடு அவரிடம் சிலர் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் போலீஸார் நேற்றிரவு ரோந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரத்திலிருந்து பெண் ஒருவரின் முனகல் குரல் கேட்டது. உடனே போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வடிந்த நிலையில் இளம்பெண் ஒருவர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தப் பெண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்தப்பெண் ஆந்திராவைச் சேர்ந்த நிகிதா (பெயர் மாற்றம்) என்றும், சென்னை நாவலூர், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் ஐ.டி கம்பெனி ஒன்றில் பணியாற்றிவருவதும் தெரியவந்தது. மேலும், இவரது வீடு சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தாழம்பூரில் உள்ளது. நேற்றிரவு ஒரு மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு டூவீலரில் வந்தபோதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நிகிதாவின் உறவினர்களுக்குப் போலீஸார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிகிதாவின் அக்காள், பள்ளிக்கரணை போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் நிகிதாவை தாக்கியவர்கள் யார் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நேற்றிரவு பணி முடிந்து நிகிதா, தனியாக டூவீலரில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ஐ.டி. நிறுவனத்திலிருந்து கால் டாக்ஸியில் செல்லும்படி நிகிதாவிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவரோ டூவீலரில் புறப்பட்டுள்ளார். பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் டூவிலரில் வந்தபோது அவரைச் சிலர் வழிமறித்துள்ளனர். அப்போது, பலத்த இரும்புக் கம்பியால் நிகிதாவின் தலையில் அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், மயக்கமடைந்துள்ளார். அதன்பிறகு நிகிதா அணிந்திருந்த தங்கச் செயின், செல்போன் மற்றும் அவரது டூவீலரை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் சென்றுவிட்டனர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நிகிதாவைத் தாக்கியவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.
நிகிதாவை வழிமறித்து நகை, விலை உயர்ந்த ஐபோன் ஆகியவற்றைப் பறித்த மர்மக் கும்பல், அவரிடம் அத்துமீறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவலைப் போலீஸார் மறுத்துள்ளனர். ஐ.டி பெண் ஊழியர் தாக்கப்பட்ட தகவலையறிந்த போலீஸ் உயரதிகாரிகள், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்துள்ளனர்.
சென்னையில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக நிகழ்ந்துவருகின்றன. பெண்களிடம் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சில ஆண்டுக்கு முன்பு ஐ.டி ஊழியர் உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது ஐ.டி நிறுவன ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது, நிகிதாவும் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை போலீஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.