அரசில் இணையாது ஐதேக, – கூட்டமைப்பு சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்துக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஐதேக தனித்து ஆட்சியமைக்கப் போவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கப் போவதாகவும், செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

“அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணியை அமைப்பது குறித்து யாரும் பேச்சு நடத்த எம்மை அணுகவில்லை.

அவ்வாறு யாரும் அணுகினால், அதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான தெளிவான செய்தி ஒன்றை மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அந்த ஆணையை நாங்கள் மதிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன்,

“எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதன் முயற்சிகளுக்கு நாம் ஆதரவு அளிப்போம்.

ஆனால், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது, எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.