மைத்திரி- ரணில் சந்திப்பில் இணக்கப்பாடு…. சிறப்புக் குழு அமைப்பு!

தற்போதைய கூட்டு அரசாங்கத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பாக, முடிவு செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றை அமைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் மற்றும், ஐதேகவின் தலைவர்களுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுக்களின் முடிவிலேயே, இன்று சிறப்பு குழு ஒன்றை அமைத்து, கூட்டு அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முடிவெடுப்பது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த சந்திப்பின் முடிவில், அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த தகவலை வெளியிட்டார்.

இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்படவுள்ள இந்த சிறப்புக் குழு விரைவில் தமது முடிவை அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.