“தூரத்துக் காதல் என் கோப்பை தேனீர் அல்ல…
மின்முத்தம் ஏதும் உன் மெய்முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாம் கேட்பாயா?
என் கை கோப்பாயா?
குறும்பார்வை வேண்டும் உன் குறுஞ்செய்தி அல்ல…
கைப்பேசி வீசி நம் கைவீசி செல்வோம்” –
‘இன்னைக்கு காதல் எப்படி இருக்குனு நீங்க கேட்ட கேள்விக்கு இந்த மியூசிக் வீடியோ பதிலா இருக்கும். காதலர் தினமான இன்றைக்கு ‘ஒன்றாக’ யூடியூப் சேனல் ‘ஒரிஜினல்ஸ்’ல ரிலீஸ் பண்ணியிருக்கோம். எப்படி இருக்குனு பாருங்க…” தன் அலைபேசியை நம் கையில் தந்துவிட்டு நம் கண்கள் தரும் பதிலுக்காகக் காத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். காலமெல்லாம் காதலைக் கொண்டாடித் தீர்க்கும் மனிதரிடம், இன்னும் சொச்ச காலத்துக்கும் கொண்டாட கொட்டிக்கிடக்கிறது காதல். கௌதமுடனான ஆழ்வார்பேட்டை ‘ஆங்கில தேநீர்க் கடை சந்திப்பிலிருந்து…
“இன்றைக்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகுள் ஹேங் ஓவர்… இப்படி தொழில்நுட்பம் மூலம் உலகமே கையடக்க அலைபேசியில் அடங்கிடுச்சு.சொல்லத் தயங்குற அன்பை, அன்னியோன்னியத்தை இந்தத் தொழில்நுட்ப சாதனங்களின் வழியே எளிதா கடக்கலாம்னு நினைக்கிறோம். ஆனால், இவையெல்லாம் காதலுக்குத் தேவையே இல்லாத அந்நியம்னு தோணுது. ஒரு பெண்ணோட உட்கார்ந்து நேரடியாப் பேசி சில விஷயங்களைச் சொல்றது என்ற அந்த ஓல்டு வேர்ல்ட் ரொமான்ஸைத்தாண்டி காதல்ல வேற எதுவுமே கிடையாதுனு நினைக்கிறேன்.
ஏதோ ஒரு பிரச்னைனா, ‘நான் பண்ணினது தவறு. ஸாரி’னு வாட்ஸ்அப்ல ஒரு மெசேஜ் அனுப்பிட்டு அமைதியாகிடுறோம். நேர்ல பார்த்துப் பேசி அந்தத் தயக்கத்தை அனுபவிச்சு கடந்து வர்றது என்ற அந்த ப்ராசஸே நாம மறந்தாச்சு. தோணுச்சுன்னா, வாட்ஸ்அப்ல டக்குனு ஒரு கிஸ் அனுப்பிடுறோம். அது எப்படி ஃபீலிங்கை கடத்தும். கண்டிப்பா அது நேர்ல தர்ற முத்தம் மாதிரி இருக்குமா. ஆமாம், இந்த டெக்னாலஜியால் ஹியூமன் கனெக்ட் போயிடுச்சு. இதை அடிப்படையா ஐடியாவா வெச்சுதான், இந்த ‘உலவிரவு’ பாடலை பண்ணியிருக்கோம்.”
“ஒன்றாக ஒரிஜினல்ஸ்… திடீர்னு இந்த எண்ணம் எப்படி வந்துச்சு?”
“முதல்ல ‘கூவ கூவ’ பண்ணினோம். ஒவ்வொரு மாதமும் ஒரு பாடல் ரிலீஸ் பண்ணணும் என்கிற ஐடியாவில் அடுத்து பண்ணுவதுதான் இந்த ‘உலவிரவு’. இது புது வார்த்தை. ‘என்னோடு வா உலவிரவு.’ அதாவது, ‘என்கூட வர்றியா ஒரு டேட் நைட் போகலாம்’னு அர்த்தம். நான், பாடகர் கார்த்திக், மதன்கார்க்கி காம்பினேஷன்ல பண்ணியிருக்கோம். என் கான்செப்ட்டுக்கு கார்க்கி எழுதி, கார்த்திக் ட்யூன்பண்ணி பாடியிருக்கார். திவ்யதர்ஷினியும் டொவினோ தாமஸும் இந்த ஆல்பத்தில் நடிச்சிருக்காங்க. இருவருமே, ‘நானா… நானா…’னு சர்ப்ரைஸோடத்தான் வந்து நடிச்சாங்க.”
“லட்சுமியைத் தொடர்ந்து இப்ப ‘மா’ குறும்படம். வேறென்ன பிளான் வெச்சுருக்கீங்க?”
“யூடியூப்தான் எதிர்காலம்னு சொல்றாங்க. ஆனால், அது எதிர்காலம் இல்லை, நிகழ்காலம். ‘ஒன்றாக’ சேனல்ல ‘வீக் எண்ட் மச்சான்’ வெப் சீரிஸ் போயிட்டு இருக்கு. ‘லட்சுமி’ குறும்படத்தைத் தொடர்ந்து அந்த டைரக்டர் சர்ஜுன்ட்ட கதை கேட்டு, ஃபண்ட் பண்ணி, ‘மா’ பண்ணினோம். இவை தவிர, இப்ப ‘ஒரிஜினல்ஸ்’ என்ற தலைப்பில் மியூசிக் பண்றோம். அப்ப ‘கூவ கூவ’ பண்ணினோம். இப்ப ‘உலவிரவு. இந்தப் பாடல்கள், பிறகு படங்களில் வரக்கூட வாய்ப்பு இருக்கு. அதாவது, பாடல்கள் வங்கி மாதிரி. வேற யார் கேட்டாலும் தரத் தயாரா இருக்கோம். அடுத்து சர்ஜுன், ‘ஒன்றாக’ சேனலுக்காக இப்ப பொலிடிக்கல் சீரிஸ் ஒண்ணு ரெடி பண்ணிட்டு இருக்கார். அரசியலை அடிப்படையா வெச்சு நானும் ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணப்போறேன். ராஜீவன், மனோஜ் பரமஹம்சானு எங்களைப் புரிந்துகொண்ட டீமைவெச்சு பெருசா செலவு பண்ணாம ஒர்க் பண்ணிட்டு இருக்கோம்.”
“ ‘மா’ படத்தைத் தேர்வு செய்ததன் பின்னணியில் ஏதேணும் சுவாரஸ்யம் உண்டா?”
“ ‘பிறப்பு என்பது எல்லாருமே செலிபிரேட் பண்ணக்கூடிய விஷயம்.’ இதுதான் ‘மா’ பட லைன். நான் அவர்ட்ட ஒரே ஒரு விஷயத்தைதான் சொன்னேன், ‘அந்தப் பையனை வில்லன் மாதிரி காட்டிடாதீங்க. ஏன்னா இரண்டு பேரும் ஏதோ ஒரு சூழல்ல அப்படி பண்ணிட்டாங்க. அதோட விளைவுகள் அவங்களுக்குத் தெரியலை, தெரிஞ்சிருந்திருக்கலாம். ‘அவள்ட்ட நான் ஸாரி கேக்கணும் ஆன்ட்டி’னு அவன் அழுவுற காட்சியை நான்தான் வைக்கச்சொன்னேன். ‘ஐயோ, இப்படிப் பண்ணிட்டோமே’னு அவனை வருத்தப்பட வைக்கணும்னு தோணுச்சு. ‘மா’, நாங்க விரும்பி, பிடிச்சு பண்ணின புராஜெக்ட்.”
“‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எப்படி வந்திருக்கு?”
“சுருக்கமா, ஸ்டைலி ஃபிலிம்னு சொல்லலாம். இது, எனக்கே கொஞ்சம் புது அனுபவம்தான். காதல், அதனால் நடக்கும் ஆக்ஷன்ஸ். இதுதான் கதை. இதிலும் இருவரும் சேர்ந்திருக்கும், பிரிந்திருக்கும் அந்தப் பெண்ணின் பின்னணினு நிறைய மெனக்கெடல் இருக்கு. நான்கு ஆண்டுகள் காதல், பிறகு பிரிவு. மீண்டும் அந்தப் பெண்ணைத் தேடிப்போகுதல், அந்தத் தேடலில் நடக்கும் விஷயங்கள்னு திரைக்கதை அமைச்சிருக்கேன். தனுஷ் அவர் பண்ணக்கூடிய விஷயங்களில் மாறுபட்ட நடிப்பைத் தந்திருக்கார். படத்தின் மிகப்பெரிய பலம், பாடல்கள். மொத்தம் ஆறு பாடல்கள். ‘மறுவார்த்தை’, ‘விசிறி’ பாடல்களைத் தொடர்ந்து ‘ஒளி மழையிலேயே அவள் குளிக்கையிலே நனைந்தேன் / நிழல் கருவியால் எனதிரு விழியில் பிடித்தேன் அவளை / படப்படப்பிடிப்பால் படப்படத்திரும் நெஞ்சம் / வசனங்கள் மறந்தே அவள் பெயர் உறைக்கும் / கனவா திரையா நிஜமா எதிலே நான் வாழ்கிறேன் / முகமா அகமா சுகமா எதிலே நான் வீழ்கிறேன்… இந்த சிங்கிளை விரைவில் ரிலீஸ் பண்ணப்போறோம்.”
“காதல் படங்களைக் கையாளும் இயக்குநரா சொல்லுங்க, இன்னைக்கு ரியல் லைஃப்ல காதல் எப்படி இருக்கு?”
“என் பட காதல் கதைகள், ரியல் லைஃப்ல நடக்குதானு எனக்குத் தெரியலை. இறங்கி, ஆராய்ச்சி பண்ணி, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்னு நான் பண்றது கிடையாது. கேள்விப்பட்டது, என் வாழ்க்கையில் நடந்ததுனு தேர்வுசெஞ்சு அதை அழகாக்குறேன். ஆனால், என் படங்கள்ல உள்ள காதல், ‘இப்படியெல்லாம் நடக்குமா’னு விலகி நின்னு பார்க்கிறமாதிரியான முரணா இருக்காது. இதைப் பார்த்துட்டு, ‘இந்தமாதிரி நாமளும் இருக்கணும்’னு ரசிகர்களை நினைக்கவைக்கிறமாதிரி இருக்கணும்’னு நினைப்பேன். ஆனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் காதல்ல ரொம்பவே வெளிப்படையா இருக்காங்க. அவங்களால் எதிர் பாலினத்திடம் எளிதாப் போய் பேச முடியுது. நிறைய விஷயங்கள் அவங்களுக்குத் தெரியுது. லவ் என்கிற கான்செப்ட் உடனடியா பிசிக்கலா மாறுதோணுகூட எனக்கு தோணுது.”
“இன்றைய ரியல் லைஃப் லவ்வை, சினிமாவுக்காக உள்வாங்கிக்கணும்னு நினைப்பீங்கள்ல, அதுக்கு என்ன பண்ணுவீங்க?”
“என் பையனுக்கு 15 வயசு. 10-ம் வகுப்பு படிக்கிறான். மகனா அவனோட மனநிலையை நான் புரிஞ்சுக்குறேன். அவன்ட்ட பேசுவேன். ‘எந்த விஷயம் பண்ணினாலும் அதுக்கான விளைவுகள் இருக்கும். தவறான விளைவுகள்னா அதை பண்ணாம இருந்தா நல்லாயிருக்கும்’னு ஒரு தகப்பனா சொல்லிட்டே இருப்பேன். அவனுக்குப் பொண்ணுங்கள்ட்ட எப்படி பேசணும்னு தெரியுது. ஸ்கூல் புக்ஸ் தாண்டி லைஃப் பற்றி நிறைய படிக்கிறாங்க, ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள பேசிக்கிறாங்க. எனக்கும் அவனுக்குமான உரையாடல்ல இதெல்லாம் பேசிப்போம். அப்ப தன் ஸ்கூல்ல நடந்த, நடக்குற விஷயங்களைச் சொல்வான். அதை அப்படியே உள்வாங்கிப்பேன்.
அதேபோல பசங்க கேக்குற மியூசிக், அவங்களோட பிளே லிஸ்ட் வித்தியாசமா இருக்கு. நாம ஒண்ணு நினைச்சு பண்றோம். அதை என் பையன்ட்ட காட்டினா கேட்டுட்டு ‘ஓகேப்பா’ங்கிறான். ‘டேய்… என்னடா சொல்ற’ன்னா, ‘பிடிச்சிருக்கு, இட்ஸ் ஓகே’ங்கிறான். ‘சரிடா, நீ என்ன கேக்குற’ன்னா, செட்ஆஃப் சாங்ஸ் பிளே பண்றான். ஆனால், அவையெல்லாம் பேஸிக்கான இன்றைய இளைஞர்கள்கிட்ட ஹிட்டான இங்கிலீஷ் பாடல்கள். இதை நான் சிங்கர் கார்த்திக்கிட்ட சொன்னேன். ‘இதுல ஒண்ணுமே இல்லையே மச்சான். இதையெல்லாம் ஈஸியா பண்ணலாம். நாம வேற என்னமோ நினைச்சு பண்றோம்’னு சொன்னார். இதுலயிருந்து நான் புரிஞ்சுகிட்டது, ரொம்பவே எளிமையா ஒரு க்ரூவ் (Groove) வெச்சு இன்ட்ரஸ்டிங்கான பாடல் வரிகளைச் சேர்த்தா அதில் ஏதோ ஒரு விஷயம் பசங்களுக்கு கனெக்ட் ஆகுது. ஆனால், நம் சினிமாப் பாடல்கள் அவங்களுக்கு அந்தளவுக்கு கனெக்ட் ஆகலையோனுகூடத் தோணுது. அதுக்குக் காரணம், நம் பாடல்கள் கொஞ்சம் அட்வான்ஸா இருக்குனு நினைக்கிறேன். அதனால், மியூசிக்கைப் பொருத்தவரை, ‘இன்றைக்கு என்ன பாட்டு கேட்ட, எனக்கு அனுப்பு’னு அவன்கிட்ட சொல்றதைத் தினமும் வழக்கமா வெச்சிருக்கேன்.”
“பையனுக்கு சினிமா ஆர்வம் இருக்கா?”
“இப்ப அவன் 10-ம் கிளாஸ்.. ஸ்டெடிஸ்ல கவனமா உட்கார்ந்துட்டு இருக்கான். நாமளும் இந்தப் படிப்பையெல்லாம் தாண்டி வந்திருக்கிறதால, ‘படி… படி…’னு அவனை ரொம்பப் போட்டு அழுத்துறது இல்லை. ஏன்னா, ஸ்கூல், காலேஜ் போறது புத்தகத்தைப் படிக்கிறதுக்காக மட்டுமல்ல, வாழ்க்கையில் போக வேண்டிய அடுத்தடுத்த கட்டங்களுக்கான வழிவகைகள் தெரிஞ்சுக்கிறதுனு நினைக்கிறேன். படிப்பு என்பது எந்தளவுக்கு தெரிஞ்சுக்கணுமோ அதைத் தெரிஞ்சுகிட்டா போதும். ஏன்னா நாம அதை லைஃப்ல பயன்படுத்தப்போறோமானு தெரியாது. ஏதோ ஒரு ஸ்ட்ரீம்குள்ள போகப்போறோம். அதுக்கு இந்தப் படிப்பு தூண்டுகோலா இருக்கணும். ஏன்னா இன்றைய சூழல்ல, லைஃப்ல என்ன வேணும்னாலும் பண்ணலாம். நல்ல நாலேட்ஜ் இருக்கணும் அவ்வளவுதான்.”
“உங்க லைஃப்ல நீங்க கடந்துவந்த காதல்கள் பற்றி சொல்லுங்க?”
“‘அப்ப நான் 10-ம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன். ‘இந்த ஒரு பொண்ணுதான் நம் லைஃப்ல’னு நினைச்சு அந்தப் பெண் பின்னாலயே இரண்டு வருஷம் டிராவல் பண்ணினேன். லவ்ல மத்தப்பசங்க மாதிரி பேசக் கூடாது, நடந்துக்கக் கூடாதுனு சாஃப்ட்டா பொயட்டிக்கா அப்ரோச் பண்ணணும்னு நினைச்சேன். அந்தப் பெண்ணோட கையைக்கூட பிடிச்சது இல்லை. இரண்டு வருஷமா. சைக்கிள்ல போயிட்டே இருப்போம். எங்கேயாவது மரத்தடியில் உட்கார்ந்து பேசுவோம். ஒருநாள், “நீ என் கையைக்கூட பிடிச்சது இல்லை. நீ செட்டாக மாட்ட”னு சொன்னாங்க. அதிர்ந்திட்டேன். தப்புப்பண்ணிட்டோமானுகூட நினைச்சேன். என் கிளாஸ் பசங்களும், ‘நீ வேஸ்ட்டுடா’னு கிண்டல் பண்ணினாங்க. ‘பொயட்டிக்கா இருக்கறது தப்பானு ஃப்ரெண்ட்ஸோட விவாதம் பண்ணினேன். அதையெல்லாம் இப்ப நினைச்சாலும் காமெடியாதான் தோணுது.
பிறகு, ‘இவதான் நம்மாளு’னு இன்னொரு லவ். நாலு வருட பயணம். நான் அப்பதான் படிப்பை முடிச்சிட்டு வந்திருக்கேன். ஆனா, ‘வெளியூர் போய் படிக்கணும்’னு அவங்க சொன்னாங்க. அவங்களுடன் அந்த ஊர்ல போய் இருக்கிற அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை, மனசும் இல்லை. பிரிஞ்சோம். அந்த வருத்தத்தில் இருந்த சமயத்தில் என்கூட ஃப்ரெண்டா இருந்தவங்கதான், இன்னைக்கு என் மனைவி. இது, அடுத்து என் அம்மா-அப்பா வாழ்க்கையில் நடந்தவை… என் சினிமாவை இன்ஃபுளுயன்ஸ் பண்றது இவைதாம். இதையெல்லாம் வெச்சு மட்டுமே, ஒரு கதை பண்ணணும்னு நினைச்சுட்டு இருக்கேன்.”
““அம்மா-அப்பா டிராவல்ல உங்ககிட்ட அவங்க ஷேர் பண்ணின விஷயங்கள் பற்றி சொல்லுங்கள்?”
“அந்த அன்புதான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். என் படத்தில் காதலர்கள் பேசும் வசனங்கள், பெண்கள் அப்பர் ஹேண்ட் எடுக்கிறது, அவங்க ஃபோர்ஸ்ஃபுல்லா உள்ள வர்றது, வெளிப்படைத் தன்மையோட இருக்கிறது… எல்லாமே எங்க அம்மா மூலம் வந்தவைதான். அப்பா ஒரு வருஷம் கூடுதலா படிக்கலைனா, அம்மாவை சந்தச்சிருக்கமாட்டார். ஆன்மிக விஷயங்களைத் தாண்டி இந்த யுனிவர்ஸ் மீதே எனக்கொரு பிடிப்பைத் தருவது இவைதாம். அம்மாவுக்கு வேறொருவர்கூட நிச்சயம் ஆக வேண்டிய சூழல். அப்ப அப்பா வேலையில்கூட சேரலை. சம்பாத்தியம் இல்லை. அதனால் வீட்டுககு வந்து அம்மாவை பெண் கேட்க முடியலை. ஆனால் அம்மா, அவரைத்தான் திருமணம் பண்ணிப்பேன்னு விடாப்பிடியா இருந்திருக்காங்க. எங்க பாட்டி, அதாவது அம்மாவோட அம்மா, அப்பவே மாடர்ன், ஃப்ரெண்ட்டிலி. அப்பாவை வரச்சொல்லி பேசி, லவ் மேரேஜை அரேஞ்சுடு மேரேஜா மாத்தியிருக்காங்க. இந்த விஷயங்களை எங்க ஃபேமிலியில அப்பப்ப பேசிட்டு இருப்போம். இதெல்லாம்தான் என் படங்களில் பிரதிபலிக்கும்.”
“‘முன்பின் அறிமுகமில்லாத, வயதான ஜோடிகளைக் கடக்கும்போது, ‘இவங்க லைஃப்ல எவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்கும், இவங்கள்ல ஒருவர் எடுத்த முடிவு இன்னொருவரை எப்படியெல்லாம் பாதிச்சிருக்கும், இந்தப் பயணத்துக்கு முன், வேற யாராவது இவங்க லைஃப்ல குறிக்கிட்டு இருப்பாங்களா… இப்படி நிறைய யோசனைகள் ஓடும். அப்படி ஒரு வாழ்க்கையை படமா பண்ணணும்னு ஆசை உண்டு. அவ்வளவு ஏன், என் அப்பா-அம்மாவின் லைஃப்லயே இன்னும் சொல்லாத கதைகள் நிறைய மிச்சமிருக்கு. அவங்களுக்குள் வேறுபட்ட கருத்துகள் நிறைய உண்டு. அந்தக் கருத்துவேறுபாடு, விவாதங்கள் இருந்தாலும் அடுத்த நாள் காலையில் ஒண்ணுமே நடக்காத மாதிரி நடந்துப்பாங்க. சுத்தி இருக்கிறவங்கதான் அதிர்ச்சியா பார்ப்பாங்க. நானும் என் மனைவிகிட்ட இப்படித்தான் நடந்துக்கணும்னு முயற்சி பண்றேன்.”
“காதலை மையமா வெச்சு இன்னும் என்னமாதிரியான படங்கள் பண்ணணும்னு நினைக்கிறீங்க?”