தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆய்வு அறிக்கையை அளித்தார் மு.க.ஸ்டாலின். `அரசியல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் தினகரனும் ராமதாஸும் பேசி வருகின்றனர். அரசியல் ரீதியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் ஸ்டாலின்’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் புரட்சிப் பயணத்தை நடத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இந்தப் பயணத்தில் பொதுமக்களையும் விவசாயிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார். ‘விரைவில் இந்த ஆட்சி அகலும். புதிய மாற்று அரசு அமையும்’ என்ற முழக்கங்களையும் தினகரன் முன்வைக்கிறார்.
நேற்று கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘சட்டப் பேரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் வேலைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் உள்ள 234 உறுப்பினர்களில் 111 பேர் மட்டுமே அரசுக்கு ஆதரவாக உள்ளனர். எதிராக 122 உறுப்பினர்கள் உள்ளனர். தினகரன் தரப்பில் 19 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மத்திய அரசின் ஆதரவோடு 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் 18 பேருக்கும் சாதகமாகத் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் இந்த அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யக் கூடாது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழக மன்றத்துக்கும் தேர்தல் வரலாம்’ எனப் பேசினார். தினகரன் மற்றும் ராமதாஸின் தொடர் பேச்சுகள் அறிவாலய வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.
“எடப்பாடி பழனிசாமியை நேற்று ஸ்டாலின் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஒரே ஒரு எம்.எல்.ஏ-வை வைத்துக்கொண்டு, ‘ஆட்சியைக் கவிழ்ப்போம்’ என தினகரன் பேசுவதை தி.மு.க முன்னணி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. 89 எம்.எல்.ஏ-க்கள் உள்ள தி.மு.க ஆதரவு அளித்தால் மட்டுமே இந்த அரசை அகற்ற முடியும். அப்படியிருந்தும், தன்னிச்சையாக ஆட்சியை அகற்றுவோம் எனப் பேசிக்கொண்டிருப்பதை ஆட்சியில் உள்ளவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு எம்.எல்.ஏகூட இல்லாத ராமதாஸ் பேசுவதையும் தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. நேற்று ராமதாஸ் பேசும்போதும், ‘ பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது’ எனப் பேசியிருக்கிறார். இதற்கு நேற்று பதில் அளித்த செயல் தலைவர் ஸ்டாலின், ‘ பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது பங்கேற்போம். ஜெயலலிதா படத்திறப்பு பற்றி கேள்வி எழுப்புவோம்’ எனப் பேசினார். நேற்று நடந்த சந்திப்பின் மூலம், ‘ என்னுடைய தயவு இல்லாமல் இந்த ஆட்சியை அகற்ற முடியாது’ என்பதை ராமதாஸுக்கும் தினகரனுக்கும் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் ஸ்டாலின்” என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,
” தி.மு.க குடும்ப உறவுகளுக்குள்ளும் இதுகுறித்த விவாதம் மேலோங்கி வருகிறது. தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘ அரசியல் களத்தில் அவரவர்கள் இஷ்டப்படி பேசுகின்றனர். எப்போது இந்த அரசைக் கவிழ்ப்போம் எனத் தெரிவதற்கு முன்பே, ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் எனப் பேசி வருகிறார் தினகரன். அவர் ஒரு எம்.எல்.ஏ. அவருக்கு ஆதரவாக இரண்டு எம்.எல்.ஏக்கள் கூடுதலாக இருக்கலாம். 18 எம்.எல்.ஏ-க்களின் எதிர்காலம் என்னவாகும் என்று அவருக்கே தெரியாது. அவர் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ அவ்வளவுதான். நம்மைப் பகடைக்காயாகப் பயன்படுத்திப் பேசி வருகிறார். அவர் வழியிலேயே ராமதாஸும் பேசி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை நிரூபித்துவிட்டு, ஆட்சியை வீழ்த்துவது குறித்துப் பேசுவோம்.
நம்முடைய முடிவை ராமதாஸும் தினகரனும் பேசிக்கொண்டிருப்பதை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. ‘ விஜயகாந்துக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துவிடக் கூடாது’ என்பதற்காக நமக்கு விட்டுக் கொடுத்தார் ஜெயலலிதா. அதேபோல், அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா சீட்டுகளை விட்டுக் கொடுத்தார் தலைவர். இதே பாணியில்தான் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த அரசை எப்போது கவிழ்க்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் இன்னொருவர் தலைநீட்டுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் செய்ய வேண்டியதை மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 89 எம்.எல்.ஏ-க்களைத் தாண்டி, இவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. எதிர்ப்பு அரசியலின் மொத்த பலனும் தி.மு.க-வுக்கே வந்து சேர வேண்டும்’ எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதே நிலைப்பாட்டில்தான் ஸ்டாலினும் இருக்கிறார்” என்றார் விரிவாக.
” தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் தினகரன். அந்த வழக்கின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும், தி.மு.க நினைத்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இதை தினகரனும் உணர்ந்து வைத்திருக்கிறார். ஆனால், ஸ்டாலினை கைகோத்து அரசைக் கவிழ்த்தால் அரசியல் ரீதியான பலன்களை அறுவடை செய்ய முடியுமா என்ற கேள்வியும் அவருக்குள் இருக்கிறது. தி.மு.க தரப்பிலோ, ‘ எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று விரும்பினால், ஸ்டாலினை நோக்கி தினகரன் வரட்டும். ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்ற முழக்கத்தை முன்வைக்கட்டும். அதை விடுத்துப் பேசிக்கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்கிறது?’ என்ற மனநிலையில் இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகே அறிவாலயத்தின் வேகம் அதிகமாகும்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.