“காதலர் தினம் கொண்டாட மும்பை போறேன்.!” – லவ் வித் பிரியாமணி

’பருத்தி வீரன்’ என்றதும் அந்தக் குறும்பும் காதலும் நிறைந்த முத்தழகு, நம் கண்களையும் மனதையும் நிறைக்கும். அந்தப் படத்துக்காக தேசிய விருது வென்றவர், பிரியாமணி. தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்தவர், அவரது நெருங்கிய நண்பரான முஸ்தபா ராஜை காதலித்துத் திருமணம் செய்துள்ளார். தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0’ நிகழ்ச்சியின் நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் ஷூட்டிங் ஸ்பாட் சந்திப்பு.

பிரியாமணி

”தமிழ்ப் படங்களில் மறுபடியும் எப்போ ரீ-என்ட்ரி கொடுக்கப்போறீங்க?”

”இப்போ ஒரு தமிழ்ப் படத்துக்காகப் பேசிட்டிருக்கேன். சீக்கிரமே என்னைப் பார்க்கலாம்.”

”டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவரா இருப்பது பற்றி…”

”டான்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். எல்லாவிதமான நடனத்தையும் கற்க ஆசைப்படுவேன். இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் செலிபிரிட்டிகளை தவிர்த்து, சாமானிய மக்களும் போட்டி போடுகின்றனர். பரோட்டா மாஸ்டரா வேலை பார்க்குறவங்களுக்குள்ளேயும் நடனத் திறமை இருக்கிறதை இந்த ஷோவில்தான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய பங்கும் இருக்கிறதை நினைக்கும்போது ஹேப்பியா இருக்கு.”

”போன வருஷம் காதலர் தினத்துக்கு உங்க கணவருக்கு என்ன கிஃப்ட் வாங்கிக்கொடுத்தீங்க?”

”என் கணவருக்கு ‘லவ்வர்ஸ் டே’ வாரத்துல தான்  பிறந்தநாள். தனித்தனியா எதுக்கு கிஃப்ட் வாங்கறதுன்னு, ஒரே கிஃப்ட்டாக, ப்ளூ கலர்ல டிரெஸ் எடுத்துக்கொடுத்தேன். அவரும் பயங்கர இம்ப்ரெஸ் ஆகிட்டார்.”

பிரியாமணி

 

”அவர் உங்களுக்குக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் எது?”

”அவரும் நானும் காதலிச்சப்போ, என்னுடன் சேர்ந்து படம் பார்க்கிறதுக்காக, மும்பையிலிருந்து பெங்களூருக்கு வருவார். திடீர்னு, ‘உன்னைப் பார்க்க வந்துட்டிருக்கேன்’னு போனில் சொல்லும்போது, என்னால் நம்பவே முடியாது. இப்படி பயங்கர சர்ப்ரைஸ் கொடுப்பார்.”

”முஸ்தபா – பிரியாமணி மணவாழ்க்கை எப்படி இருக்கு?”

”நாங்க நண்பர்களா இருந்தப்போ, நான்தான் அவரை காதலிக்கிறதை முதலில் சொன்னேன். நான் ஜோக் பண்றதா நினைச்சு சிரிச்சார். அப்புறமாத்தான் நான் சொல்றது சீரியஸ்னு புரிஞ்சு திகைச்சுட்டார். கொஞ்சம் டைம் எடுத்துதான் லவ் யூ சொன்னார். இதே நட்பும் அன்பும் மாறாமல் இருக்கணும்னு முடிவு பண்ணினோம். இப்போவரை அப்படியே இருக்கோம். முஸ்தபா ஃபேமிலி எனக்கு ஃபுல் சப்போர்ட். அதனால்தான் தொடர்ந்து என்னுடைய கரியர்ல கவனம் செலுத்தமுடியுது. நான் எப்பவும் நானாக இருக்கிறதையே கணவரும் குடும்பத்தினரும் விரும்பறாங்க. இப்படி ஒரு ஃபேமிலி கிடைச்சது என்னுடைய அதிர்ஷ்டம்.”

”கணவன் – மனைவியாக இந்த வருட லவ்வர்ஸ் டே பிளான் என்ன?”

”இப்போ அவர் துபாயில் இருக்கார். நான் சென்னையில். லவ்வர்ஸ் டே ஈவ்னிங் மும்பைக்கு வந்துடறதா சொல்லியிருக்கார். நானும் அங்கே போறேன். நாங்க சந்திக்கும் நேரத்தில், மேக்ஸிமம் லவ்வர்ஸ் டே முடிஞ்சிருக்கும். அப்புறமாத்தான் நாங்க கொண்டாடப்போறோம். மிஸ்டர் & மிஸ்ஸஸா நாங்க கொண்டாடும் முதல் காதலர் தினம். ஸோ, ஜாலியா செலிபிரேட் பண்ணுவோம்.”

பிரியாமணி

 

”உங்க கணவருக்காக சமைச்சுக் கொடுத்துருக்கீங்களா?”

”நான் அவருக்கு சமைச்சு கொடுத்ததில்லே. அவர்தான் எனக்கு அசைவம் சமைச்சு கொடுத்துருக்கார். எனக்காக அன்போடு அவர் சமைக்கும் எதுவா இருந்தாலும், அது கூடுதல் ஸ்பெஷல்!”

”உங்க கணவரிடம் பிடிக்காத விஷயம்?”

”அவரிடம் பிடிச்சதும் பிடிக்காததும் ஒண்ணுதான். எந்த விஷயமா இருந்தாலும், சட்டுன்னு முகத்துக்கு நேராகச் சொல்லிடுவார். அது சில விஷயங்களில் பிடிக்கும்; சில விஷயங்களில் பிடிக்காது.”

”உங்களுடைய பிளஸ் & மைனஸ் என்ன?”

”நான் எல்லோரிடமும் ஃப்ரெண்ட்லியா பழகுவேன். அதுதான் பிளஸ். எல்லாரையும் சுலபமா நம்பிடறது மைனஸா இருந்துச்சு. இப்போ கொஞ்சம் முயற்சி பண்ணி அந்த மைனஸைக் குறைச்சுட்டிருக்கேன்.”

”உங்களுடைய பியூட்டி சீக்ரெட்ஸ்…”

”அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நாலு லிட்டர் தண்ணீர் குடிப்பேன். அதுதான் நான் சொல்ற டிப்ஸ்.”

”உங்களுடைய ஃபேவரைட் ஹீரோ, ஹீரோயின் யார்?”

”கமலும் ஶ்ரீதேவியும் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்.”