யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்டைத் தெரிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடந்த கூட்டத்திலேயே ஆர்னோல்ட், யாழ். மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் முன்னிலையில் இந்தத் தெரிவு இடம்பெற்றது.
யாழ். மாநகரசபைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில், பங்கேற்றனர் என்றும், இதில், ஆர்னோல்ட் மாநகர முதல்வர் பதவிக்கு ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ். மாநகர பிரதி முதல்வராக ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
எனினும், 45 பேர் கொண்ட யாழ்ப்பாண மாநகரசபையில், ஆர்னோல்ட் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.