திருச்சியின் பிரதான சாலை. தினமும் ஆயிரக்கணக்கானோர் நடந்தும், வாகனங்களிலும் கடக்கும் சாலை. இங்கு சாலை ஓரத்தில் மன நலம் குன்றிய ஒருவர் வெட்டப்படாத தலைமுடி, மழிக்கப்படாத தாடி, துர்நாற்றம் வீசும் ஆடை என அலங்கோலமாய் அழுக்கு படர்ந்த உடலோடு திரிந்து கொண்டிருந்தார்.அவர் அருகில் வந்த இருவர் அவரை அமர வைத்து அவருக்கு முடி வெட்டி, தாடியை திருத்தி நல்ல ஆடைகளை அணிவித்து உணவளித்தனர். மனிதம் சமூக சேவை குழுவினர். இதுவரை 3000க்கும் மேற்பட்டோருக்கு இப்பணியை செய்துள்ளனர்.
இக்குழுவினர் இதுபோன்ற பணிகளை மட்டுமல்லாது ஆதரவற்ற முதியோர்களுக்கான காப்பகம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு மையம், தெருவோரக் குழந்தைகளை சைல்ட் லைன் அமைப்பின் உதவியோடு மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது, சாலையோரங்களில் இருப்பவர்களுக்கு தினமும் உணவளிப்பது, உடைகள் அளிப்பது போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர்.சாலையோரத்தில் மயங்கிய நிலையில் சுய நினைவை இழந்து கிடப்பவர்களையும், மனநலம் பாதிக்கப்பட்டோர்களையும், மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சைக்கு உதவுகின்றனர். மேலும், இது போன்ற பரிதாப நிலையிலோ அல்லது உடல் மற்றும் மன நலம் பாதிக்கபட்டு சாலையோரங்களில் காணப்படுபவர்களைப் பற்றி தெரியப்படுத்தினால் அவர்களுக்கு உடனடியாக உதவுவதாக கூறுகின்றனர் மனிதம் குழுவினர்.மனிதம் முதியோர் இல்லத்தில் உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குதல், வாரத்திற்கு ஒருமுறை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் ஆலோசனைப்படி மருந்து கொடுத்து, தினமும் தெரபி பயிற்சியும் அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் “இல்லாதோர்க்கு இயன்றதை கொடுப்போம், மீதம் கொடுத்து மனிதம் காப்போம்” என்ற திட்டத்தின் மூலம் தினமும் மதிய உணவு வழங்கி வருகிறது மனிதம் குழு.
இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற முதியோர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட மன நோயாளிகளுக்கும், தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு வேளை உணவு உறுதியாக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
தங்களின் சமூகப்பணி குறித்து மனிதம் சமூக சேவை குழுவினரில் ஒருவரான காயத்ரி தெரிவிக்கும் போது “மனிதம் குழுவில் முழுக்க முழுக்க சமூகப்பணித்துறை பயிலும் மாணவர்களும், சமூக சேவகர்களும் இணைந்துதான் செயலாற்றி வருகிறோம். மனிதம் துவக்கும் போது மூன்று பேருடன் துவங்கினோம். தற்போது 100ற்க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியோடு செயல்பட்டு வருகிறோம்.
தன் பணிகளை தங்களால் செய்ய முடியாத முதியவர்களையும், மனநலம் குன்றியவர்களையும் சுமையென கருதுகின்றனர் சிலர். ஆனால், உதவும் எண்ணம் கொண்ட எங்கள் மனிதம் குழுவின் நண்பர்களால் நாங்கள் செய்யும் இந்த சமூகப்பணி எங்களுக்கு சுமையாக தெரியவில்லை” என்கிறார் அக்குழுவை சேர்ந்த காயத்ரி.