வீட்டிலிருந்து புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் கொல்லப்பட்ட ரவுடி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை மனித தலை வீசப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மக்களைப் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. கொலைக்கான காரணம் இதுவரை தெரியாததால் போலீஸார் குழம்பியுள்ளனர்.

காட்டாங்கொளத்தூர் பகுதியில் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் காத்திருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையில் கொண்டுவந்த பிளாஸ்டிக் பையை வீசிவிட்டுச் சென்றனர். அந்த பிளாஸ்டிக் பையில் இருந்து மனிதத் தலை சாலையில் உருண்டோடியது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் காவல்துறையினர் தலையைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். இதைத் தொடர்ந்து காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே உள்ள முட்புதரில் தலையில்லாத சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மணிமங்கலம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அந்த உடலுடன் தலை ஒப்பிட்டுப் போனது. கொலை செய்யப்பட்ட நபர் கோனாதி கிராமத்தைச் சேர்ந்த ரவுடி பாலாஜி என்பது உறுதியானது. காலை 9 மணிக்கு ஒரு துக்கநிகழ்வுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு நகரமன்ற துணைத்தலைவராக இருந்த குரங்கு குமாரைக் கொன்றவர் ரவி பிரகாஷ். அதைத் தொடர்ந்து குரங்கு குமார் வகித்த நகரமன்ற துணைத்தலைவர் பதவிக்கு வந்தார் ரவிபிரகாஷ். அடுத்த சில மாதங்களிலேயே ரவி பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். ரவி பிரகாஷ் கொலையில் முக்கியக் குற்றவாளியான பாலாஜிதான் தற்போது கொலை செய்யப்பட்டவர். இவர்மீது கொலை மிரட்டல், கஞ்சா கடத்தல் எனப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜி கொலை செய்யப்பட்டது ஏன் என்பது இன்னும் புலப்படவில்லை. இதனால் உள்ளாட்சி பிரமுகர்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. பலவருட பகை தொடர்வதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே நிலவிவருகிறது.