இன்று பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினமாக (வலன்டைன் தினம்) கொண்டாடப்படுகிறது.
மனித இனத்துக்கு களங்கமில்லாத, சுயநலமில்லாத பரவசத்தைத் தரக்கூடியது காதல். ‘நமது ஆழ்மனதை மற்றொருவருக்குத் தரும்போது பரவசமான உணர்வு நம்மை வியாபிக்கிறது.
அந்த உணர்வின் வெளிப்பாடுதான் காதல்’ என்கிறார்கள் அறிஞர்கள். அது ஏற்படுத்தும் மயக்கம் அற்புதமானது. உலகத்திலிருந்து விடுபட வைத்து இருவருக்கும் இடையே சுகமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது காதல்.
காதலர் தினம் எவ்வாறு ஆரம்பித்தது என்பது தொடர்பில் பல கதைகள் கூறப்படுகின்றன. புராதன ரோமில் ரோமானியர்கள் லூப்பர்காலியா என்ற திருவிழாவை கொண்டாடி வந்தனர்.
பெப்ரவரி 13 முதல் 15 வரை அனுஷ்டிக்கப்படும் லூப்பர்காலியா இனவிருத்தியோடு தொடர்புடைய பழங்கால விழாவாகும். லூப்பர்காலியா ரோம் நகர உள்ளூர் மக்களுக்கான ஒரு திருவிழா.
மிகவும் பொதுவான திருவிழாவான ஜூனோ ஃபெப்ருவா, அதாவது “தூய்மையாக்கும் ஜூனோ” பெப்ரவரி 13, 14 ஆகிய நாட்களில் கொண்டாடப்பட்டது. இதுவே காதலர் தினமாக மாறியது என சிலர் கூறுகின்றனர்.
பெப்ரவரி 14ஆம் திகதி இங்கிலாந்தின் மத்திய பிராந்தியத்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த தினமே காதலர் தினமாக கொண்டாடுவதாக வேறு சிலர் கூறுகின்றனர்.
எனினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் ஆரம்பமாகியமைக்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கி.பி.207 ஆம் ஆண்டில் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ் மன்னன், தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம்.
இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர். போர் வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என அவர் கருதினான்.
திடீரென ஒருநாள் ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது, படையில் சேரும் இளைஞர்களுக்கு ‘திருமணம் ஆகியிருக்கக் கூடாது காதலிக்கக்கூடாது என சட்டமியற்றினான்.
இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என உத்தரவிடுமாறு தனது அமைச்சருக்கு அறிவித்தான்.
திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் இளைஞர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இவை இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று இரண்டாம் கிளாடியஸ் மன்னன் எண்ணினான். மன்னனின் அறிவிப்பைக் கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், பாதிரியார் வலன்டைன் அரசனின் இந்த அறிவிப்பை மீறி காதல் ஜோடிகளுக்கு இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதையறிந்த மன்னன் வலன்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வலன்டைன், அச்சிறையின் தலைமைக் காவலர் அஸ்டோரியஸின் பார்வை இழந்த மகள் ஜூலியாவை குணப்படுத்தினார்.
இதை அறிந்த சிறைத் துறைத் தலைவனின் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். வலன்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னன் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியார் வலன்டைனின் தலையைச் சீவும்படி ஆணையிட்டான்.
கி.பி.207 பெப்ரவரி 14 ஆம் திகதி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் ‘வலன்டைன்ஸ் டே (Valentine’s Day) எனும் காதலர் தினம்.
காதலர் தினம் குறித்த கட்டுரையொன்றில் அ.செந்தமிழ்ச்செல்வி என்பவர் இவ்வாறு கூறுகிறார்:
‘நம் எண்ணங்களையும், ஆசைகளையும், கனவுகளையும், தாபங்களையும், எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு காதலி அல்லது காதலன் கிடைத்து விட்டால், வாழ்க்கை முழுமையாகிவிடும்’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கே காதலின் சக்தி புரியும்.
ஒருவருக்கொருவர் உடமையாவதும், உரிமை கொண்டாடுவதும், ஆளுமை செலுத்துவதும் அல்ல காதல்; இரு உள்ளங்கள் சங்கமிக்கும் நிகழ்வு அது.
உண்மையில், காதலுக்காக சுயநலத்தையும், அகந்தையையும் இழப்பதில் தான் வாழ்க்கையின் இரகசியமே அடங்கியிருக்கிறது. காதலின் ஆச்சரியங்களில் ஒன்று சரணாகதி.
எல்லாவற்றையும் காதலுக்கு அர்ப்பணிக்கும்போது காதலர்கள் புதுப்பிறவி எடுக்கிறார்கள். இதைப் புரிந்தவர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். தோற்றவர்கள் சபிக்கிறார்கள்.
அதேவேளை சிலர் இனக்கிளர்ச்சியை காதல் என உள்ளர்த்தம் செய்துகொள்கின்றனர். தமக்கு ‘போய் பிரண்ட்’ ‘கேர்ள் பிரண்ட்’ இல்லையென்றால், நண்பர்கள் மத்தியில் சமூக அங்கீகாரம் கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் இளையோர் மத்தியில் “காதல்’’ உருவாகி வளர்ந்து வருகிறது.
இவ்வாறான பல காதல்கள் திருமணம் வரை செல்வதில்லை.
திருமணம் ஒரு முடிவு அல்ல, ஆரம்பம் என்கிற நம்பிக்கை வந்தால் திருமணத்துக்குப் பிறகும் காதலை தொடர முடியும்.
திருமணத்திற்கு முந்தைய காதலும், பிந்தைய காதலும் ஒன்று என்கிற தவறான எண்ணம்தான் பிரச்சினைக்குக் காரணம்.
தற்போதுள்ள பணிச்சுமை, பொருளாதார நெருக்கடி, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாமைதான் காதல் மணமுறிவிற்கு அடிப்படை காரணம்.
கணவன், மனைவியான பிறகு தங்களின் மன அழுத்தங்களையும் வெறுப்புகளையும் வெளியேற்றும் வடிகாலாக ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது காதலுக்கு தரும் மரியாதை அல்ல.
சுதந்திரமான ‘ரொமான்டிக்’ காதல் வேறு. இல்லறத்தில் புதுப்பிறவி எடுக் கும் காதல் வேறு என்பதைப் புரிந்து கொண்டாலே உங்கள் வாழ்க்கையில் குளிர்ச்சியான தென்றல் வீசும். உங் களது இணையை நேசிக்கவும், மதிக் கவும் கற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு நேசம் வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்.
காதலில் வென்றவர்களைவிட தோற்ற வர்கள் அதிகம். கடந்த காலத் தையே நினைத்து பரிதவித்துக் கொண்டு இருந் தால், நிகழ்காலம் கைவிட்டுப் போய் விடும். மாற்றம் என்பது முடிவல்ல, முற்றுப் புள்ளியும் அல்ல புதிய ஆரம்பம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.”