அமெரிக்கா, இந்தியா கூட்டு அரசைப் பாதுகாக்க முயற்சி – மகிந்த அணி குற்றச்சாட்டு

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே கூட்டு எதிரணி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  சேஷான் சேமசிங்க, சிசிர ஜெயக்கொடி தேனுக விதானகமகே ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

2015இல் மகிந்த ராஜபக்சவை அகற்றும் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் இப்போது கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள்.

உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இடம்பெறும் வெளிநாட்டுத் தலையீடுகள் தீவிர கரிசனைக்குரியது. என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்த பின்னர், அமெரிக்க மற்றும் இந்தியத் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.