கோலியின் அணுகுமுறை… தோனியுடன் களமிறங்க வேண்டியது யார்?

மூன்றாவது விக்கெட்டாக ரஹானே அவுட்டாகும்போது, இந்திய அணியின் ஸ்கோர் 176. அந்த 32-வது ஓவரின் முடிவில் ரன்ரேட் 5.63 ஆக இருந்தது. 40 ஓவர்கள் முடியும்போது கொஞ்சம் குறைந்து 5.60. ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில். அடுத்து களமிறங்கத் தயாராக தோனி, ஹர்டிக் பாண்டியா என இரு பெரும் ஹிட்டர்கள். குறைந்தபட்சம் ஓவருக்கு 7 ரன்கள் வீதத்தில் அடித்திருந்தாலே 300 ரன்களை தாண்டியிருக்கும் இந்தியா. ஆனால், 50 ஓவர்கள் முடிவில் இந்தியா எடுத்த ஸ்கோர் 274. கடைசி 10 ஓவர்களில் வெறும் 44 ரன்கள். இந்தியா தோல்வியடைந்த 4-வது போட்டியிலும், கடைசி 10 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்தது. என்ன பிரச்னை? எங்கு பிரச்னை?

SAvsIND

என்ன பிரச்னை என்ற கேள்விக்கு சிம்பிளான பதில் – இந்தியாவின் மிடில் ஆர்டர். ரஹானே, தோனி என்ற இரு அனுபவ வீரர்கள், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்டிக் பாண்டியா என துடிப்பான இளைஞர்கள்… நன்றாகவே அமைந்திருக்க வேண்டிய காம்போ. ஆனால், திணறுகிறது. கூட, முதல் 3 போட்டிகளில் கேதர் ஜாதவ் வேறு விளையாடினார். இந்த தென்னாப்பிரிக்கத் தொடரின் 5 போட்டிகளிலும் சேர்த்து இந்திய மிடில் ஆர்டர் (நம்பர் 4 முதல் நம்பர் 7 வரை) அடித்தது 250 ரன்கள்தான். இது இந்தியா அடித்த மொத்த ஸ்கோரில் வெறும் 19.92 சதவிகிதம்! இந்தத் தொடரில், இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சராசரி 20.83. இது புவனேஷ்வர் குமார் சராசரியை (20.00) விடக் கொஞ்சமே அதிகம்.

முதல் போட்டியில் அரைசதம் அடித்த ரஹானே பின்னர் திணறுகிறார். தோனியும் பெரிதாக சோபிக்கவில்லை. ஹர்டிக் பாண்டியா… புவி பரவாயில்லை எனும் அளவுக்கு பேட்டிங் செய்கிறார். மூவரும் 4 இன்னிங்ஸில் சேர்த்து முறையே 106, 69, 26 ரன்கள்தான் எடுத்துள்ளனர்.  டாப் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோரில் போட்டிக்கு ஒருவர் சதமடித்துவிட, மிடில் ஆர்டர் சொதப்பல் இந்திய அணியைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. கடந்த சில தொடர்களில் இந்த இடத்தில் தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே எனப் பல ஆப்ஷன்களையும் இந்திய அணி பயன்படுத்திவிட்டது. இன்னும் எந்த காம்பினேஷும் திருப்தியளிக்காத நிலையில், இந்த மிடில் ஆர்டர் பிரச்னை உலகக்கோப்பைக்கு முன் தீர்க்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

middle order average

ஆனால், உண்மையைச் சொல்லப்போனால், இவர்கள் அனைவருமே நல்ல பேட்ஸ்மேன்கள்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கின் சராசரி 61. கேதர் ஜாதவ் 37.46, மனீஷ் பாண்டே 34.20, ஹர்டிக் பாண்டியா 30.68 என்ற சராசரியில் விளையாடியுள்ளனர். அப்படியிருக்கையில் எங்கு பிரச்னை? கோலி – ரவி சாஸ்திரி கூட்டணியின் முடிவுகள்தான்! ஹர்டிக், கார்த்திக், மனீஷ், ஜாதவ் என எவருமே தொடர்ந்து ஒரே இடத்தில் களமிறக்கப்படவில்லை. தொடர்ச்சியாக வேறுவேறு இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, தோனியும் கூடத்தான்!

2017 ஜனவரியில் நடந்த இங்கிலாந்து அணியுடனான தொடர்தான் முழுநேர கேப்டனாக கோலி தலைமை தாங்கிய முதல் தொடர். அன்று முதல் அடிக்கடி பிளேயிங் லெவன் மட்டுமல்ல, பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களின் பொசிஷன்களும் மாற்றப்படுக்கொண்டே இருக்கின்றன. நடுவில் ரோஹித் தலைமையேற்ற இலங்கை தொடரிலும் இது நடந்துள்ளது. 2017-க்குப் பிறகு கேதர் ஜாதவ் 19 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். அவற்றுள் 3 முறை மூன்றாவது வீரராக, 6 முறை நான்காவது வீரராக, 7 முறை ஐந்தாவது வீரராக, 3 முறை ஏழாவது வீரராகவும் விளையாடியுள்ளார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் அவரது பொசிஷன் தொடர்ந்து மாற்றப்பட்டுள்ளது.

SAvsIND

அவர் மட்டுமல்ல, ரஹானே தவிர்த்து மிடில் ஆர்டரில் விளையாடி வரும் அனைத்து வீரர்களுக்கும் இதே நிலைதான். ஹர்டிக் பாண்டியா (ஐந்து முறை நம்பர் 4, ஐந்து முறை நம்பர் 5, இரண்டு முறை நம்பர் 6, பதினோரு முறை நம்பர் 7), மனீஷ் பாண்டே  (3 முறை நம்பர் 4, இரண்டு முறை நம்பர் 5, மூன்று முறை நம்பர் 6), தோனி  (ஒரு முறை நம்பர் 4, ஒன்பது முறை நம்பர் 5, பன்னிரண்டு முறை நம்பர் 6, நான்கு முறை நம்பர் 7), தினேஷ் கார்த்திக் (4 முறை நம்பர் 4, ஒரு முறை நம்பர் 5, ஓரு முறை நம்பர் 7) என அத்தனை வீரர்களின் பேட்டிங் ஆர்டரையும் தொடருக்குத் தொடர், போட்டிக்குப் போட்டி மாற்றியுள்ளார் விராட்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின்போது “எந்த வீரராலும் எல்லா இடங்களிலும் சரியாக விளையாடிட முடியாது. அதற்கு அவர்களுக்கு அவகாசம் வேண்டும்” என்று கூறிய புத்திசாலி கேப்டன் செய்யும் இந்த முடிவுகள் வேடிக்கையாகவும் வேதனையாகவுமே இருக்கிறது. தொடர்ந்து ஒரு பொசிஷனில் விளையாடினால்தான் ஒரு வீரரால் சீரான ஆட்டத்தைக் கொடுக்க முடியும். இப்படி மாற்றிக்கொண்டே இருந்தால் அது எப்படி சாத்தியமாகும்? 3 வருட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்குத் திரும்பிய தினேஷ் கார்த்திக் அதன்பிறகு நம்பர் 4 பொசிஷனில் 71 ரன் சராசரி வைத்துள்ளார். இந்தத் தொடரில் அந்தப் பொசிஷனில் ஆடும் ரஹானேவின் சராசரி 26.50. தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை!

கோலி - சாஸ்திரி

ஹர்டிக் பாண்டியா… ‘இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ எனப் பேசப்பட்டவர். 4 இன்னிங்ஸ்களில் 26 ரன்கள் எடுத்துள்ளார். 7-வது வீரராகக் களமிறங்கிய போட்டிகளில் அவரது சராசரி 38.77. ஆனால், இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே அவர் அந்தப் பொசிஷனில் விளையாடியுள்ளார். கடைசி ஓவர்களில் ரன்சேர்க்க வேண்டும் என்பதற்காகப் பல போட்டிகளில் அவரை முன்னமே களமிறக்குகிறார் கோலி. அப்படி அவர் ப்ரமோட் செய்யப்பட்டால், மனீஷ் பாண்டே, ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் 7-வது வீரராக பேட்டிங் செய்ய வேண்டியிருக்கும். அப்போது அவர்களின் செயல்பாடு சோடைபோவது சகஜம்தான். ஏனெனில், அவர்கள் ஒன்றும் யுவ்ராஜ், தோனி போன்றவர்கள் அல்ல. அனைவரும் 100 போட்டிகளுக்கும் குறைவாகவே விளையாடியவர்கள். அவர்களுக்கு நிலையான இடம் கொடுப்பது அவசியம்.

அதேபோல் பேட்டிங்கை மட்டுமே அடிப்படையாக வைத்து பிளேயிங் லெவனை முடிவு செய்வதும் தவறு. கடந்த இரண்டு போட்டிகளாக 5 பௌலிங் ஆப்ஷன்களுடன்தான் களமிறங்குகிறது இந்தியா. பாண்டியா – இன்னும் முழுமையாக நம்பத்தகுந்த பௌலர் கிடையாது. ஒருசில ஆடுகளங்களில், முன்னணி பௌலர்கள்கூட சிலசமயம் தடுமாறலாம். எனவே, ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இருப்பதும் நல்லது. கேதர் ஜாதவ் போன்ற வீரர் இந்த இடத்தில்தான் அவசியமாகிறார். 2017-க்குப் பிறகு ஆறாவது வீரராகக் களமிறங்கிய போட்டிகளில் 51.50 என்ற சிறந்த சராசரி வைத்துள்ளார். ஆனால், 19 இன்னிங்ஸ்களில் 12 முறை அவரை மற்ற இடங்களில் களமிறக்கியுள்ளார் விராட். இதுதான் இந்தியாவின் பிரச்னை.

SAvsIND

இனி இன்னும் அதிக ஆப்ஷன்கள் கொடுப்பதற்காகவும், இன்னும் பிளேயிங் லெவன் செலக்ஷ்னை கடினப்படுத்துவதற்காகவும் தயாராகிவிட்டார் ரெய்னா. யோயோ டெஸ்டில் பாஸாகி, தென்னாப்பிரிக்காவுடனான டி-20 தொடருக்கும் தேர்வாகிவிட்டார். அவர் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், அவரும் இந்திய ஒருநாள் மிடில் ஆர்டருக்கான போட்டியில் நுழைந்துவிடுவார். இந்திய அணிக்கு இப்போது இல்லாத இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், நல்ல ஃபீல்டர், பார்ட் டைம் ஸ்பின் என பல ஆப்ஷன்கள் கிடைக்கும். நான்காவது வீரராகக் களமிறங்கிய போட்டிகளில் 45 சராசரி வைத்துள்ளார். நம்பர் 6 பொசிஷனிலும் (சராசரி : 35.54) நன்றாகவே விளையாடியுள்ளார். ஆனால், துணைக்கண்டத்துக்கு வெளியே மிடில் ஆர்டரில் இவரது சராசரி (30.68) கேதர் ஜாதவ் கொண்டிருக்கும் சராசரியை (44.80) விடக் குறைவு. இதையும் கருத்தில் கொள்வது அவசியம்.

சரி இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க…? ஹர்டிக் பாண்டியாவுக்கு நிரந்தரமான பேட்டிங் பொசிஷன் கொடுத்து, அணியில் அவரது ‘ரோல்’ என்ன என்பதைத் தெளிவு படுத்துவது அவசியம். அவர் நம்பர் 7 ஸ்லாட்டில் விளையாடுவதுதான் சரி. தோனி…? 4, 6,7 இடங்களில் மற்ற வீரர்கள் நன்றாக ஆடுவதாலும், இவர் எந்த இடத்திலும் விளையாடக் கூடியவர் என்பதாலும், தோனி நம்பர் 5 பேட்ஸ்மேனாக வருவதுதான் சரி. ரோஹித், தவான், கோலி – அசைக்க முடியாத டாப் 3. இனி அந்த 4 மற்றும் 6-வது பொசிஷன்கள். பார்ட் டைம் ஆப்ஷன் தேவை என்பதால் கேதர் ஜாதவ் விளையாடுவது அவசியம். அவர் நம்பர் 6 இடத்துக்குத்தான் பொருந்துவார். ஆக, நம்பர் 4 பொசிஷனில் நல்ல சராசரி வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக் (71.00) அல்லது மனீஷ் பாண்டே (36.00) யாரையேனும் ஒருவரை களமிறக்கலாம். ஒருவேளை ரெய்னாவைக் களமிறக்கினால், நம்பர் 6 பொசிஷனுக்கு 45.66 சராசரி கொண்டிருக்கும் மனீஷ் பாண்டே நல்ல சாய்ஸாக இருப்பார்.

Suresh Raina

அட யாரை வேண்டுமானாலும் களமிறக்கட்டும், ஆனால் தொடர்ச்சியாக ஒரே பொசிஷனில் களமிறக்கப்படவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்தில் இறங்கினாலும் உலகத்தரத்தில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இருக்கும் 11 பேரும் விராட் கோலி அல்ல என்பதை கேப்டன் விராட் உணர வேண்டும். ‘நானும் பயிற்சியாளர்’ என்று அந்தப் பதவியில் அமர்ந்திருக்கும் ரவி சாஸ்திரியும் அதை உணரவேண்டும். இல்லையேல், 2019 உலகக்கோப்பையில் untested மிடில் ஆர்டர்தான் களமிறங்கும். 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்போல் ஏதேனும் ஒரு முக்கியப் போட்டியில் டாப் ஆர்டர் சீர்குலையலாம்… பின்னர் முடிவும் அதேபோலத்தான் அமையும். விராட் மாறுவாரா…? தன் அணுகுமுறையை மாற்றுவாரா…?