ஆட்சி நடத்த கூட்டமைப்பிற்கு நேசக்கரம் நீட்டும் ஐ.தே.க!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வட மாகாணத்திலும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாமையே இதற்குக் காரணமாகும்.இந்நிலையில், யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்இதனிடையே, யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறை பிரதேச சபையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தனியொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபையைத் தவிர்ந்த பச்சிளைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளிலும் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.