`அய்யோ… விட்டுருங்கன்னு கதறினோம்’ – வனத்துறையினரால் சுற்றுலாப் பயணிகளுக்கு கொடூரம்

கொடைக்கானலில், புல்வெளியில் நடனமாடிய சுற்றுலாப் பயணிகளை இரண்டு நாள்களாகத் தனியறையில் அடைத்துவைத்து, வனத்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலில் இது ஆஃப் சீஸன். ஆண்டு முழுவதும் தங்கும் விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள், இதுபோன்ற சுற்றுலாப் பயணிகள் குறைவாக உள்ள சமயங்களில் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பாக, கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் 22 பேரை, அதன் உரிமையாளர் அவுட்டிங் அனுப்பியுள்ளார். கவுஞ்சி கிராமத்துக்குச் சென்ற அவர்கள், அங்கிருக்கும் அரசுப் பள்ளிக்கு எதிரேயிருந்த வருவாய்த்துறைக்குச் சொந்தமான புல்வெளியில் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த கொடைக்கானல் வனத்துறை ஊழியர்கள், இது வனப்பகுதி… இங்கு வரக் கூடாது. அத்துமீறி வந்துள்ளதால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். சுற்றுலா சென்றவர்களோடு இருந்த உள்ளூர் நபர்கள், `இது வருவாய்த்துறை இடம்தானே, நீங்கள் ஏன் அபராதம் விதிக்கிறீர்கள்’ எனக் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 12 நபர்களை விசாரணைக்காக என்று சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், 36 மணி நேரமாகியும் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வராததால், அவர்களின் உறவினர்கள், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்று மதியம், 75,000 ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு  அழைத்துச் செல்லுங்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், உறவினர்கள் அபராதத் தொகையுடன் அங்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு சென்றவர்களுக்குக் கடுமையான அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

வனத்துறை தாக்குதல்

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சையது அபுதாகிரியிடம் கேட்டபோது, ‘வனத்துறையினர், எங்களைக் கொலைக்குற்றவாளிகளைப்போல  நடத்தினார்கள். கடுமையாகத் தாக்கியதுடன், மூர்ச்சையானவர்களைத் தெளியவைத்து தெளியவைத்து அடித்தார்கள். அய்யோ… விட்டுருங்க எனக் கதறியபோதும், மனம் இரங்காமல் பூட்ஸ் காலால் மிதித்து உதைத்தார்கள். கால் எலும்பு முறியும் அளவுக்கு அடித்தார்கள். அப்படி நாங்கள் என்ன குற்றம் செய்துவிட்டோம். புல்வெளியில் நடனமாடியது அத்தனை பெரிய குற்றமா’ என்றபடிக் கதறினார்.

கொடைக்கானல் வனத்துறையினரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலுக்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடுக்க உள்ளனர்.