தீபா வீட்டில் நடந்த போலி வருமானவரி சோதனை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலி ஐ.டி. அதிகாரியாக நடித்த பிரபாகரனை இயக்கியது பேரவை நிர்வாகிகள் என்று போலீஸில் மாதவன் புகார் கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் குதித்தார் அவரது அண்ணன் மகள் தீபா. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். பேரவையில் நியமித்த நிர்வாகிகளால் சிக்கல் எழுந்தது. அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அடுத்து நடந்த தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து பேரவையின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட இ.சி.ஆர். ராமசந்திரன் மீது தீபா தரப்பு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது. அதில், தீபா வீட்டில் கல்எறியப்பட்ட சம்பவத்தில் ராமசந்திரனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சி.சி.டி.வி. கேமரா பதிவில் ராமசந்திரனுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. அதோடு தீபா வீட்டில் காவலாளியாக வேலைப்பார்த்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபா வீட்டுக்குள் ஐ.டி. அதிகாரி என்று கூறி புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் நுழைந்தார். தீபா வீட்டிலிருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பிரபாகரன் தப்பி ஓடினார். இந்தச் சம்பவத்தில் மாதவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. தப்பியோடிய பிரபாகரன், மாம்பலம் போலீஸாரிடம் சரணடைந்தார். அப்போது, பிரபாகரன் பேசும் வீடியோ வெளியானது. அதில், மாதவன்மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால், மாதவனிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஐ.டி அதிகாரி போல நடித்த பிரபாகரன் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்து, போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணைக்காக பிரபாகரன் இன்று புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு வருமான வரித்துறை அதிகாரியின் அடையாள அட்டையைப் போலியாக தயாரித்துக்கொடுத்தவர்களிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக போலி ஐ.டி. அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கும் மாதவனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதவன் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், போலி ஐ.டி. அதிகாரி பிரபாகரனை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதோடு போலீஸாரிடம் கொடுத்த தகவலில் இந்தச் சம்பவத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் உள்ள சில நிர்வாகிகள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால், பேரவை நிர்வாகிகள்மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் ஹோட்டல் தொழில் செய்துவருகிறார். இவருக்குப் புதுச்சேரி, விழுப்புரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஹோட்டல்கள் உள்ளன. ஹோட்டல் தொழிலுடன் ஷேர் மார்க்கெட்டிலும் ஈடுபட்டுள்ளார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் சிரமப்பட்ட பிரபாகரன், தீபா வீட்டுக்குச் சென்று நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு சிலர் உதவியுள்ளனர். அதன்படி, ஐ.டி. அடையாள அட்டை, சர்ச் வாரன்ட் ஆகியவற்றை போலியாகத் தயாரித்து, அதன்பிறகு அதிகாலையிலேயே தீபா வீட்டுக்குத் தனியாக வந்துள்ளார் பிரபாகரன். அதன்பிறகு, வீட்டிலிருந்த காவலாளிகளிடம் விவரத்தைச் சொல்லியிருக்கிறார்.
ஒரு மணி நேரம் காத்திருந்த பிரபாகரன் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வீட்டில் தீபா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லை. மாதவனின் போனில் தீபாவிடம் பேசியிருக்கிறார் பிரபாகரன். அப்போது பிரபாகரன் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவர் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார். அதன்பிறகு அவரே எங்களிடம் சரணடைந்தார். சரணடைந்த அவர், மாதவன் ஏற்பாட்டில்தான் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். அதுதொடர்பான வீடியோவும் வெளியானது. மாதவன், தன்னிடம் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும் கூறினார். ஐ.டி. கார்டு, சர்ச் வாரன்ட் ஆகியவற்றை கூரியர் மூலம் மாதவன் அனுப்பிவைத்ததாகவும் விசாரணையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்திடம் விசாரித்தோம். ஆனால், எந்தவித கூரியரும் மாதவனிடமிருந்து பிரபாகரனுக்கு அனுப்பப்படவில்லை என்று தெரியவந்தது. அடுத்து பிரபாகரன் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அதிலும் மாதவனுக்கு எதிராக எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை. இதனால், தீபா வீட்டில் நடந்த போலி ஐ.டி சோதனைக்கும் மாதவனுக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதற்கிடையில் மாதவன் கொடுத்த புகாரில் பிரபாகரனை இயக்கியவர்கள் யார் என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்.