வைரலாகும் சப்-கலெக்டரின் வரதட்சணை கடிதம்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி, முகநூலில் வெளியிடுவது வழக்கம்.

அப்படி அவர் கடந்தவாரம் எழுதிய வரதட்சணை தொடர்பான கடிதம் ஒன்று தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இது.

சரயு வரதட்சணை கடிதம்

`நான் புதுக்கோட்டை மாவட்ட சார் ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை இறப்பும் அதன் மீதான ஆய்வும் விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

இந்த வழக்குகளில் தூண்போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன். இருவரும் வரதட்சணை சாவுகள் குறித்து விரிவாகப் பேசினோம்.

”நான் பாத்த 90% கேஸ்களில், தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எல்லோரும் மாதவிடாய் காலத்தில்தான் இருந்திருக்காங்க.

இப்படிப்பட்ட நேரத்தில் அந்தப் பெண்ணுங்களுக்கு என்னலாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுதா, தெரியுதான்னு எனக்குத் தெரியலை. இந்த நேரத்தில், பெண்களுக்குக் கோபம் ரொம்ப அதிகமாக வரும்.

அதுபோக ஒரே விரக்தியா இருக்கும். இது எல்லாத்தைவிடக் கொடுமை என்ன தெரியுமா. அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க இது எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க.

இதனால் மனசு உடைஞ்சு போயிடும். நாம பாத்த பெரும்பாலான தற்கொலைகளில் அப்போதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு. பிரசவத்துக்குப் பின் ஏற்படுகிற மனச்சிதைவு (டிப்ரஷன்) பத்தி நமக்கு யாருக்கும் புரிஞ்சுருக்கானே தெரியல” என்று டாக்டர் என்னிடம் கூறினார்.

இங்கே தான் நம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது.

இதனால், எதைக் குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ அது குறித்துப் பேச மறுக்கிறோம். இந்த மாதவிடாய் நாள்களில் ஒரு பெண்றுக்கு ஏற்படும் வேதனை சொல்லி மாளாது.

மாதவிடாய் நெருங்கும்போது, மனதளவிலும் உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. பள்ளிக்காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார்.

வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்துபோனது.

இதைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக எல்லா ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். தங்களுடைய அம்மாக்கள், தங்கைகள், தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாள்களில் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது, பிரசவத்துக்குப் பிறகு, ஏற்படும் மனச்சிதைவுகள் குறித்தும் போதுமான விழிப்பு உணர்வை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.

நம் அனைவருக்குமான சமூகத்தை அப்படித்தான் வளர்த்து எடுக்க முடியும். பெண்களாக, இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம். என்னை நம்புங்கள்.

ஒவ்வோர் ஆணும் – தகப்பனும், தமையனும், தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள். அன்புடன்… சரயு.”

இந்தக் கடிதம் குறித்து சரயுவிடம் பேசினோம்.  “எனது பணி சார்ந்து எனக்குள் ஏற்பாடும் மனவோட்டங்களை முகநூலில் மளையாள மொழியில் பதிவு செய்வது வழக்கம்.

அப்படி பதிவு செய்த கடிதம்தான் இது. அதைத் தமிழில் மொழிபெயர்த்து எனது நண்பர் அவரது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்” என்றார்.