தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் முரண்பாடுகளை கொண்டுள்ள அணி இருந்தால், அந்த அணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என சவால் விடுப்பதாக பேச்சுவார்த்தையின் பின்னர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் வியாகுல நிலைமை சம்பந்தமாக கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று அலரி மாளிகையில் கூடியது.
கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.