வணிகவியல் பாடத்தில் சென்டம் எடுக்க டிப்ஸ்!

வாழ்க்கை, பிசினஸ் இரண்டுக்குமே பயன்படுவது காமர்ஸ் என்கிற வணிகவியல். இந்தப் படிப்பில் பேங்க் செக்டார்களில் வேலைவாய்ப்பு அதிகம். அதனால் காமர்ஸில் சென்டம் எடுப்பது, எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. அதற்கான டிப்ஸ் தருகிறார்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், சி.பி.எஸ்.சி. ஆசிரியர் ஒருவரும்…

சென்டம்

முத்துசெல்வம், மதுரை லேபர் வெல்ஃபேர் மேல்நிலைப் பள்ளி.

1. ப்ளூ பிரின்ட்படி கேள்வித்தாள் வருவது இந்த வருடமே கடைசி என்பதால், சுலபமாகத்தான் வரும். புரிந்து படித்தால், அருமையான சப்ஜெக்ட், காமர்ஸ்.

2. மொத்தம் 8 சேப்டர். இதிலிருந்து 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் வரும். இதில், 20 மதிப்பெண்ணுக்குச் சரியான விடையைத்தேடு, 20 மதிப்பெண்ணுக்குக் கோடிட்ட இடத்தை நிரப்புக என்று கேட்பார்கள். 36 கேள்விகள் புக் பேக்கில் இருந்தே வரும் என்பதால், 40 மதிப்பெண்ணைச் சுலபமாகவே எடுத்துவிடலாம். ஆனால், ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ பகுதியின் கேள்விகளை, ‘சரியான விடையைத் தேர்ந்தெடு’ என மாற்றிக் கேட்கும்போதோ, ‘சரியான விடையைத் தேர்ந்தெடு’ பகுதியின் கேள்விகளை, ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ எனக் கேட்கும்போதோ, சில மாணவர்கள் சென்டமை நூலிழையில் தவற விட்டுவிடுகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.

3. மேலே சொன்ன பாயின்ட்போலவே, ஒரு விரிவாக்கத்தை சொல்லிவிட்டு, அதைச் சொன்னவர் யாரென்று கேட்பார்கள். குழப்பத்தில் பதிலைத் தவறவிடாதீர்கள்.

4. ஒன் வேர்டைப் பொறுத்தவரை, முதல் இரண்டு சேப்டர்களில் தலா 3 கேள்விகளும், 3 மற்றும் 4-வது சேப்டரில் தலா 7 கேள்விகளும், 5 மற்றும் 6-வது சேப்டர்களில் தலா 6 கேள்விகளும், 7 மற்றும் 8-வது சேப்டர்களில் தலா 4 கேள்விகளும் கேட்கப்படும்.

5. 4 மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். அதில் பத்துக்கு பதில் எழுதவேண்டும். இதில், தனியார் வணிகம் என்கிற முதல் சேப்டரில் ஒரு கேள்வியும், மற்ற 7 சேப்டர்களில் தலா இரண்டு கேள்விகளும் கேட்பார்கள். இந்த சேப்டர்களில் வரும் இலக்கணங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் படித்தால் 40 மதிப்பெண் உங்களுக்கே உங்களுக்குத்தான்.

எக்ஸாம் டிப்ஸ்

6. 4 மதிப்பெண் கேள்விகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்.

(அ) ஒருங்கிணைத்தல் என்றால் என்ன?

(ஆ) தரவரிசை முறை கோட்பாடு

(இ) பன்னாட்டு நிர்மத்துக்கு எடுத்துக்காட்டு

(ஈ) கர்த்தா என்பவர் யார்?

(உ) வரையறா பொறுப்பு

(ஊ) கூட்டாளிக்கிடையே நிலவும் உறவுமுறை

(எ) உழையா கூட்டாளி என்பவர் யார்?

(ஏ) கூட்டு மற்றும் தனிப்பொறுப்பு

(ஐ) பொது கூட்டுறு என்றால் என்ன?

7. 8 மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை, இரண்டாவது சேப்டரைத் தவிர, மிச்சம் உள்ள 7 சேப்டர்களில், நாலாவது சேப்டரிலேயே இரண்டு 8 மதிப்பெண் கேள்விகள் வந்துவிடும். இதில்…

(அ) இந்து கூட்டுக்குடும்பத்தைப் பற்றி விவரி.

(ஆ) கூட்டாண்மையில் இளவரின் நிலை…

(இ) செயல்முறையின் விதிகளின் உள்ளடக்கம்

(ஈ) பங்குகளை வட்டத்தில் வெளியிட நிபந்தனைகள்.

(உ) முறைகேடான ஒதுக்கீடு பற்றி…

(ஊ) முதலீட்டாளர், ஊக வணிக வேறுபாடு.

(எ) பொதுத்துறை, தனியார்த்துறை வேறுபாடு

போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. ஸோ, எல்லாவற்றையும் புரிந்து படியுங்கள்.

8. 20 மதிப்பெண் கேள்விகள் 4 கேட்கப்படும். இந்தப் பகுதியில் மொத்த மதிப்பெண்ணையும் எடுக்க, இரண்டு சுலபமான வழிகள் இருக்கிறது. இது, கடைசி நேரத்தில் எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்துவிடப் போராடும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

(அ) முதல் சேப்டரில் இருக்கும் மூன்று 20 மதிப்பெண் கேள்விகள், இரண்டாவது சேப்டரில் நான்கு 20 மதிப்பெண் கேள்விகளை முழுமையாகப் படித்துவிடுங்கள். 40 மதிப்பெண் கிடைப்பது உறுதி.

(ஆ) இரண்டாவது வழி… முதல் சேப்டர் அல்லது 8-வது சேப்டர், 2-வது சேப்டர் அல்லது 7-வது சேப்டர், 3-வது சேப்டர் அல்லது 6-வது சேப்டர், 4-வது அல்லது 5-வது சேப்டர் என்று படித்தாலும் 80 மதிப்பெண்களையும் முழுதாகப் பெற்றுவிடலாம்.

தமிழ்நாட்டில், கணிதப் பாடத்துக்கு அடுத்து மாணவர்கள் அதிகம் ஃபெயிலாவது காமர்ஸ் பாடத்தில்தான். ஒரு காமர்ஸ் டீச்சராக மிகுந்த மனவருத்தம் கொடுக்கும் விஷயம் இது. இனி வரும் நாள்களிலாவது இந்த வழிமுறைகளில் படியுங்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்!

பரீட்சை

மாலதி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம், கீழ்ப்பாக்கம், சென்னை.

1. 80 மதிப்பெண்ணுக்கு மட்டும்தான் சி.பி.எஸ்.சி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவார்கள். ஆனால், இவர்களுக்குக் கேள்வித்தாளில் எந்த சாய்ஸும் கிடையாது. 2 வால்யூமிலும் இருக்கும் அத்தனை சேப்டர்களையும் படித்தே ஆக வேண்டும். 80 மதிப்பெண்களில் 48 சதவிகிதம் கேஸ் ஸ்டடீயாக வரும். 32 சதவிகிதம் நேரடி கேள்விகளாக வரும்.

2. சென்டம் எடுக்க இலக்கு வைத்திருக்கும் மாணவர்கள், கான்செப்ட்களை முழுமையாக புரிந்துப் படித்தால் 48 சதவிகித மதிப்பெண்ணை சுலபமாக எடுத்துவிடலாம். இந்த கான்செப்டை எப்படி கேட்பார்கள் தெரியுமா? உங்கள் பாடப்புத்தகத்தில் இருந்தே ஒரு ஸ்டோரியை எடுத்து, அதிலிருந்து கேட்பார்கள். ஸோ, புரிந்துப் படிக்கும் மாணவர்களுக்கு இது சுலபமான விஷயமே.

3. 6 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் கேள்விகளில் ஈஸியாக ஸ்கோர் செய்யும் மாணவர்களும், ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகளால் சென்டமை தவறவிடுகிறார்கள். இதற்கான தீர்வு, கேள்விகளை எப்படியெல்லாம் ட்விஸ்ட் பண்ணிக் கேட்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தவிர, இணையதளத்தில் இருக்கும் சி.பி.எஸ்.சி. மாடல் கேள்வித்தாள்களில் ஒரே கேள்வியை எப்படியெல்லாம் மாற்றி மாற்றிக் கேட்டுள்ளார்கள் என்பதைப் பாருங்கள். உங்களுக்கு நிறைய ஐடியாக்கள் கிடைக்கும்.

4. சென்டமை தவறவிடுவதற்கு இன்னொரு காரணம், மாணவர்களுக்கு மொழி ஆளுமை போதாமல் இருப்பது. அது தமிழோ அல்லது ஆங்கிலமோ, கேள்விகளை எப்படி ட்விஸ்ட் பண்ணிக் கேட்டாலும், புரிந்துகொள்ள மொழி ஆளுமை நிச்சயம் வேண்டும். இதை, சில வாரங்களில் செய்துவிட முடியாது என்றாலும், கல்லூரிக் காலத்திலாவது மாணவர்கள் இந்த ஸ்கில்லை வளர்த்துக்கொள்ளுங்கள்.

பப்ளிக் எக்ஸாம்

5. காமர்ஸைப் பொறுத்தவரை, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு தலா 2 நிமிடங்கள்தான் தரவேண்டும். 6 மதிப்பெண் கேள்விகளுக்கு தலா 10 நிமிடங்கள். அதிலும், பதில்களை எத்தனை வார்த்தைகளில் கேட்கிறார்களோ, அதற்குச் சற்று முன்பின்னாக வார்த்தைகளைக் கூட்டி, குறைத்து எழுதினாலும் பரவாயில்லை. 6 மதிப்பெண் கேள்விகளுக்கு 200 வார்த்தைகள் எழுதவேண்டுமே எனப் பதற்றமாகி, வார்த்தைகளைத் தேடி நேரத்தை வீணாக்காதீர்கள்.

6. எப்படியாவது பாஸாக வேண்டுமென போராடும் மாணவர்கள்… ஸ்டார்ட்டிங், டைரக்டிங், கன்ட்ரோலிங், ஃபார்மிங், ஆர்கனைஸிங் போன்ற பாடங்களை முழுமையாகப் படியுங்கள். ஆல் த பெஸ்ட்!