நாங்க சின்ன வயசுலே இருந்து லவ் பண்ணிட்டு இருக்கோம். எங்க வீட்டுல என்னைக்குமே என் காதலைச் சொல்ல தயங்கினதே இல்லை. ஏன்னா, என் அப்பாவுடைய படங்கள் எல்லாம் லவ் சப்ஜெக்ட் படங்கள்தான். ஆனா, அவர் வீட்டுல சொல்லத்தான் ரொம்பப் பயந்தோம்’ – வெட்கப் புன்னகையோடு பேச்சைத் தொடங்குகிறார், விஜயலட்சுமி.
உங்கள் வாழ்க்கையில் வந்த முதல் புரொபோஸ்?
முதல் புரொபோஸ் பத்தி சொல்லணும்னா, அதுக்கு பல வருடம் முன்னாடி ஃபிளாஷ்பேக் போகணும். ஸ்கூல் படிக்கிறப்போதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. ஸ்கூலில் என்கூட படிக்கிற பையன் எனக்கு ‘ஐ லவ் யூ’ கார்ட் கொடுத்தான். அப்போ, நான் ஸ்கூல்ல ரொம்ப சீன் போடுவேன். எந்தப் பசங்ககிட்டேயும் முகம் கொடுத்துப் பேசமாட்டேன். ஸோ, அவன் புரொபோஸை ரிஜெக்ட் பண்ணிட்டேன்.
காதல் கணவருக்கு முதல் ஃகிப்ட் கொடுக்க நிறைய யோசிச்சிருப்பீங்களே?
ஆமா. ரொம்ப யோசிச்சு ஒண்ணுமே தோணாம, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸ் எல்லாத்தையும் ஒண்ணுசேர்த்து அதை அப்படியே போட்டோ கார்ட் மாதிரி நானே பண்ணிக் கொடுத்தேன். ஒவ்வொரு போட்டோக்கும் கீழே நானே சொந்தமா யோசிச்சு கவிதைகள் எல்லாம் எழுதினேன். அவர் பார்த்துட்டு, நெகிழ்ந்துட்டார்!
உங்க காதல் கதையை முதலில் யாரிடம் சொன்னீங்க?
எனக்கு ரெண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸும்கூட. எந்த விஷயமும் அவங்ககிட்ட நான் மறைச்சதில்லை. என் கணவர் என்னை லவ் பண்ற விஷயத்தையே முதல் முதல்ல என் தங்கச்சிக்கிட்டதான் சொன்னார், ஃபெரோஸ். அதனால, நானும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சத்துக்குப் பிறகு, அவகிட்டதான் சொன்னேன்.
முதல் செல்ஃபி எங்கே எடுத்தீங்க?
நாங்க ஸ்கூல் படிச்ச காலத்திலே இருந்தே லவ் பண்ணதுனால அப்போ இந்த செல்ஃபி டிரெண்ட் எல்லாம் இல்லை. ஆனா, கேமராவுல நிறைய போட்டோஸ் எடுத்திருக்கோம். முதல் போட்டோ எடுத்த இடம், எம்.ஜி.எம்.
காதலர்களாக முதலில் சென்ற இடம்?
எப்போதும், நாங்க ரெண்டுபேரும் எங்க ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோடதான் இருப்போம். முதல்ல போன இடமும் எம்.ஜி.எம்தான். ஆனா, தனியா போகலை. நண்பர்கள் எல்லோரும் இருந்தாங்க.
உங்க கணவர் எப்படி உங்களுக்கு புரொபோஸ் பண்ணினார்?
என்னை ரொம்ப நாளாவே அவர் லவ் பண்ணிட்டு இருந்தார். ஆனா, சொல்லலை. எனக்கும் அவரைப் பிடிக்கும். நானும் அதை அவரிடம் காட்டிக்கமாட்டேன். என் தங்கச்சிக்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கார். அவ, ‘நீங்க இத்தனை மணிக்கு போன் பண்ணுங்க. அவ போன் எடுத்துப் பேசுவா’னு சொல்லிட்டா. நான் அவர் போனுக்காக காத்துக்கிட்டு இருந்தேன். பார்த்த, அந்தநேரத்துல ஒரு ராங் நம்பர்ல இருந்து கால். அது எப்பவுமே எனக்குப் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ற ஆளு. அவன்கிட்ட, ‘உங்ககிட்ட நாளைக்குப் பேசுறேன். முக்கியமான போனுக்காக வெயிட் பண்றேன்’னு சொல்லி கட் பண்னேன். பிறகென்ன, இவர் போன் பண்ணிப் புரபோஸ் பண்ணார். நான் செம ஹாப்பி!.
காதலுக்குப் பிறகு முதல் சண்டை?
இன்னும் அந்தச் சண்டை ஞாபகமிருக்கு. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பிறகு எங்கேயாவது லாங் ட்ரைவ் போவோம். காரில் எதுவும் பேசமா அமைதியா நான் உட்காந்திருப்பேன். அவர் பேசிக்கிட்டே இருந்தார். நான் வாயே தொறக்கலை. சடார்னு கோபப்பட்டு, என்னை மறுபடியும் வீட்டுல இறக்கிவிட்டுட்டுப் போயிட்டார். ஆனா, இப்போ, நான் வாயைத் திறந்தாலே, ‘தயவுசெஞ்சு வாயை மூடுமா’னு கெஞ்சுறார்.
உங்கள் காதல் கதையுடன் நீங்க தொடர்புபடுத்திப் பார்க்குற சினிமா?
இதுவரைக்கும் எங்க காதல் கதையை யாரும் படமா எடுக்கலை. இனி, என் கணவரே எடுத்தாதான் உண்டு.
திட்டும்போது நீங்க ரெண்டு பேரும் அதிகமா பயன்படுத்துற வார்த்தை?
நான் சண்டையிலே அதிகமா வாயே திறக்கமாட்டேன். அவர் எப்போதும் என்னை ‘மென்டல்’னு சொல்லித் திட்டுவார். அந்த வார்த்தையைக் கேட்டாலே எனக்குக் கோபம் தலைக்கு ஏறிடும்.