உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!!

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம்

கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் தத்தமது எதிர்காலம் குறித்துத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தருணம் இதுவாகும்.

இக் கட்டுரை வட மாகாண தேர்தல் முடிவுகளை மையமாக வைத்தே அணுகுகிறது. இதற்குப் பிரதான காரணம் வட மாகாணமே தேசிய இனப் பிரச்சனையின் மைய விசையாக உள்ளதால் இம் மாகாணம் காத்திரமான முடிவுகளை நோக்கிச் செல்லுமாயின் தமிழ் அரசியலை மட்டுமல்ல தேசிய அரசியலையும் மாற்ற முடியும்.

இத் தேர்தல் முடிவுகள் இரண்டு பிரதான தமிழ் அரசியல் கட்சிகளை அடையாளம் காட்டியுள்ளன. அவை தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பனவாகும்.

TNA-Sampanthan-Sumanthiran-600x359  உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம் TNA Sampanthan Sumanthiranகடந்த 70 ஆண்டுகளாக தமிழ் அரசியலில் காத்திரமான பங்கை வகித்து வரும் தமிழரசுக் கட்சி இவ் இடைக் காலத்தில் காத்திரமான எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

தொடர்ந்தும் பலவீனமான, ஜனநாயக உட் கட்டமைப்பு அற்ற, தனிப்பட்ட உறவுகளை செயற்பாட்டு வடிவமாகக் கொண்ட கட்சியாக உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்திலும், தேசிய அரசியலிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இக் கட்சி அதன் போக்கில் அல்லது கட்சிக் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தாத போதிலும் அதன் உள் உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

உதாரணமாக கடந்த 30 ஆண்டுகளாகச் செயற்பாட்டிலுள்ள நவ தாரளவாத பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக பல வர்த்தகர்கள், மத்திய தர வர்க்கத்தினர், புலம்பெயர் நிதி ஆதரவாளர்கள் என்போர் அதன் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையுள்ள சக்திகளாக மாறியுள்ளனர்.

உதாரணமாக வட பகுதிக் கட்சி நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளை கொழும்புத் தலைமைகள் மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. இதில் சில சர்வதேச சக்திகளின் பங்கும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

இதன் காரணமாக கட்சியின் ஆதிக்க பலம் மத்திய தர வர்க்கத்தின் கரங்களுக்கு மாறியுள்ளது. இதனால் அக் கட்சியின் கருத்தோட்டத்திலும், தீர்மானங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மிக நீண்ட கால கட்சி என்பதாலும், மக்களின் அரசியல் மற்றும் சமூக, பொருளாதாரத் தேவைகளை இக் கட்சியால் நிறைவேற்ற முடியாது என்ற நிலை தற்போது அதிகரித்துள்ளதாலும், சிங்களக் கட்சிகள், மாற்றுத் தமிழ்க் கட்சிகள் தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளதாலும் இக் கட்சி படிப்படியாக செல்வாக்கை இழந்துள்ளதை இத் தேர்தல் உணர்த்துகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி வட பகுதியில் 30 முதல் 35 சதவீத வாக்குகளையே பெரும்பாலான சபைகளில் பெற்றுள்ளது.

இச் சபைகளின் தனிப் பெரும்பான்மையை இக் கட்சி பெற்ற போதிலும் எதிரணிகளின் கூட்டுப் பலம் பல சபைகளில் அதிகமாக உள்ளதால் அரசியல் ரீதியாக அல்லது சபையை சுமுகமாக நடத்துவதற்காக அல்லது ஏனைய பிற காரணங்களின் அடிப்படையில் இணைந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டுச் செயற்பாடு என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக 2001 இல் உருவாகிய கூட்டமைப்பு இன்றுவரை முரண்பாடுகளின் அடையாளமாகவே உள்ளது.

புதிய தேர்தல் முறை இக் கட்சிகளை நிரந்தர இணக்கப்பாட்டை நோக்கிய செயற்பாடுகளுக்குத் தள்ளியுள்ளது. அதிக வாக்குப் பெற்றவர்கள் 60 சதவீதமாகவும், 40 சதவீதமானவர்கள் விகிதாசாரத்திலும் தெரிவு செய்யப்படுவதால் எதிரணியினரும் கணிசமான பங்கை வகிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக யாழ்.மாநகர சபையில் கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களைப் பெற்ற போதிலும் எதிரணியினரின் தொகை அதை விட அதிகம் என்பதால் சபையைச் சுமுகமாக நடத்த எதிர் தரப்பினருடன் இணக்கத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

K.Ponnampalam  உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம் K

அதே போன்று பருத்தித்துறை சபையின் தமிழ்க் காங்கிரஸ் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தனித்து அதிக ஆசனங்களைப் பெற்ற போதிலும் எதிரணியினரின் தொகை அதிகம் என்பதால் இவர்கள் ஏனையோரின் இணக்கத்தைப் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

இத் தேர்தலில் இரண்டாவது பாரிய அணியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வட பகுதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இக் கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்ட போதிலும் 2015ம் ஆண்டின் பின்னர் தனியான கட்சியாகவும், அரசுடன் ஓரளவு இணைந்தும் செயற்படுகின்றனர்.

தமிழர் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நெருக்கமாக உள்ளதால் இக் கட்சியினர் அதிக ஆதிக்கத்தைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால் முன்னர் போல மக்கள் ஆதரவு இவர்களுக்குக் கிடைக்காது என்ற முடிவையே கொள்ள முடியும்.

ஆனாலும் இக் கட்சியும், அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையாலும், போர்க் காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்குத் தேவையான குறைந்த பட்ச வசதிகளையாவது பெற்றுக் கொடுக்க முடிந்தது.

பல்வேறு கொலைகள், கொலைப் பயமுறுத்தல்கள் என்பவற்றிற்கு முகம் கொடுத்தே இச் சேகைளைப் பெற்றுக் கொடுத்தனர். இதன் காரணமாக மிகவும் ஆழமான மக்கள் ஆதரவை இக் கட்சி நிரந்தரமாகவே தக்க வைத்துள்ளது என்பதை இத் தேர்தல் உணர்த்தியுள்ளது.

அது மட்டுமல்ல வட மாகாணத்தில் மிகவும் கணிசமான ஆதரவைப் பரவலாக கொண்டிருக்கிறது என்பதை இத் தேர்தல் நன்கு உணர்த்தியுள்ளது.

img_0591  உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம் img 0591

யாழ்.மாவட்ட வாக்குப் பலத்தை ஒப்பீட்டு அடிப்படையில் பார்க்கும் போது கூட்டமைப்பினர் 105,947 வாக்குகளைப் பெற்ற வேளையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 57,679 வாக்குகளைப் பெற்று இரண்டாவது நிலையில் உள்ளனர்.

அது மட்டுமல்ல இந்த இரு கட்சிகளும் இணைந்த வாக்குகள் 50 சதவீதத்திற்கு அதிகமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கூட்டமைப்பு அகில இலங்கை அளவில் 339,675 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது ஒட்டு மொத்த வாக்குகளில் 3 சதவீதத்தையே இக் கட்சி பெற்றுள்ளது.

இவ் வாக்குகளில் யாழ். மாவட்டத்தில் மட்டும் 105,947 வாக்குகளாகும். ஏனைய மாவட்டங்கள் ( கிழக்கு மாகாணம் உட்பட ) 233.728 வாக்குகளாகும். எனவே தமிழ்.அரசியலில் யாழ்.மாவட்டம் தீர்மானகரமானது என்ற முடிவுக்கு நாம் செல்ல முடியும்.

அரசியல் எதிர்காலம்

இனி இத் தேர்தலின் அரசியல் முக்கியத்துவம் என்ன? என்பதை ஆராய்ந்தால் அவை மிக முக்கியமான முடிவுகளை உணர்த்துகின்றன.

அதாவது வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட கட்சிகளின் அரசியல் கொள்கைகள் பற்றிக் கவனத்தைச் செலுத்துவோமாயின் தமிழ்க் காங்கிரஸ் என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.

தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பின் அரசியல் நியாயமான அளவிற்குத் தெளிவாகியுள்ளது. பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பது என்பதான தெளிவான பாதை திறக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு வழிகளில் தீர்வைக் காண்பது என்பதுடன் பிரிவினை சாத்தியமில்லை என்பதும் முக்கிய நோக்கங்களாக கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டது.

எனவே எதிர்கால தமிழ் அரசியல் என்பது மீண்டும் இலங்கைப் பாராளுமன்ற அரசியல் வழி முறைகளை நோக்கித் திரும்பியுள்ளது. இத் தேர்தலில் மகிந்த தரப்பினரின் வெற்றி அரசியல் அமைப்பு யோசனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதினாலும் பேச்சுவார்த்தைகளே வழி, சிங்கள மக்களின் ஆதரவு அவசியம் என்பதும் உணரப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு இடைக்கால வரைபுகளில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் கடுமையான விவாதங்களுக்குள் உட்படுத்தப்பட்டன.

புதிய யோசனைகளில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளோ அல்லது சமஷ்டி யோசனைகளோ இல்லை என எதிர் தரப்பினால் முன் வைக்கப்பட்ட போதிலும் அதனைத் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதோடு அரசுடன் பேசித் தீர்ப்பதே அணுகுமுறை என்பதை ஏகோபித்த அளவில் ஆதரித்துள்ளனர்.

இந்த விடயத்தில் கூட்டமைப்பினர் எதிர்கால அரசியல் வழிமுறைகள் மீண்டும் பாராளுமன்ற அரசியல் வழிமுறைக்குச் செல்வதை மக்கள் ஆதரித்துள்ளனர்.

இதற்கு மேலும் ஆதாரங்களாக தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் கலந்து கொண்டதன் மூலம் ஏற்கெனவே உறுதிப்படுத்தி உள்ளனர்.

இருப்பினும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகள், அதன் அரசியல் தலைமையின் தனிப்பட்ட பலவீனங்கள் அதன் எதிர்கால அரசியலில் நம்பிக்கை கொள்ளத் தவறியுள்ளன. 40 சதவீத்திற்குக் குறைவான மக்களே தேர்தலில் பங்களித்துள்ளனர்.

இத் தொகையில் சிறிய பங்கில் பெரும்பான்மையைப் பெற்றிருப்பது ஆரோக்கியமான அரசியல் எதிர்காலம் உண்டு என எதிர்பார்ப்பதற்கு இல்லை.

இந் நிலையில் தமிழரசுக் கட்சி தனது தற்போதைய அரசியல் பாதையில் சமாந்தரமாக பயணித்துச் செல்லும் ஏனைய சக்திகளை இப் பயணத்தில் இணைத்துச் செல்வது அவசியமாகி உள்ளது.

கடந்த70 ஆண்டுகளாக தனித்து அரசியல் நடத்திக் கிடைத்த பலன் துன்பங்களே. தற்போது எடுத்துள்ள அரசியல் வழிமுறை பற்றி மிக நீண்ட காலமாகவே ஏனைய ஜனநாயக சக்திகள் வலியுறுத்திய போதிலும் இக் கட்சிக்குள் காணப்பட்ட குறும் தேசியவாதம் இச் சக்திகளை இணைக்க உதவாதது மட்டுமல்ல, மாற்றத்திற்குத் தடையாகவும், மக்களின் கொடுமையான துன்பங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது.

எனவே தமிழரசுக் கட்சி தனது பலவீனங்களை உணர்ந்து தமிழ் அரசியலுக்குப் புதிய வீரியத்தை வழங்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கள பௌத்த தேசியவாதம் தொடர்ந்து பலமடைந்து செல்லும்போது அவை சிறுபான்மைத் தேசிய இனங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை ஏற்றுக்கொண்டு தேசிய இனங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை வழிமுறைகளை ஆரம்பிக்க வேண்டும்.

இதற்குப் பரந்த அளவில் செயற்படும் ஜனநாயக சக்திகளின் அனுசரணை அவசியமானது. ஏனெனில் இவர்களின் இணைப்பே சிங்கள மக்களின் நம்பிக்கையைத் தர வல்லது.

கூட்டமைப்பிற்குள் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் தேசிய நல்லிணக்கம், சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே அரசியல் ரீதியான பொது உடன்பாடு போன்றவற்றை எட்டுவதற்கான சக்திகள் அதிக அளவில் இல்லை.

தேர்தல் காலங்களில் சுமந்திரன் மட்டுமே வெளிப்படையாகப் பேசும் நிலையில் காணப்பட்டார். இவரது ஆளுமை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

இருப்பினும் அவரது விவாதங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளது. எனவே அடுத்த கட்டமாக கட்சியை அவ்வாறான அரசியல் நோக்கங்களுடன் ஒட்டு மொத்தமாகப் பயணிக்கும் வகையில் மாற்ற வேண்டும். கட்சிக்குள் பலமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தச் சுமந்திரன் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

ஆனால் கட்சிக்குள் உள்ள பழமைவாத கன்சவேட்டிவ் சக்திகள் இந்த மாற்றங்களுக்குத் தடையாக இருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.

இதற்கான ஒரே வழி ஒரே அரசியல் நோக்கம் கொண்ட இதர அரசியல் சக்திகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் அரசியலில் ஒரே நோக்கத்தில் செயற்படும் அதாவது அரசியல் தீர்வு, இனவாத எதிர்ப்பு, நல்லிணக்கப் பேச்சுவார்த்தை, தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி போன்றவற்றில் குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த சுமந்திரன் போன்றோர் தமது அரசியல் பலத்தை உபயோகிக்க வேண்டும்.

கட்சிகளுக்கு வெளியில் பெரும்தொகையான ஜனநாயக சக்திகள் இம் மாற்றத்திற்கு உதவ காத்திருக்கின்றன. இதில் கட்சி அரசியல் நோக்கிற்கு அப்பால் தேசிய நலன் கருதி தமிழரசுக் கட்சி செயற்படுமாயின் இந்த ஜனநாயக சக்திகள் உதவ முன்வருவார்கள்.

உதாரணமாக மைத்திரி அவர்களை ஜனாதிபதியாக ஆக்கியதில் சோபித தேரர் தலைமையிலான மற்றும் வேறு பல சிவில் சமூகங்கள் உதவின.

இதன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் மைத்திரி அவர்கள் மீண்டும் அவர்களை அழைத்துப் பேசியது கவனத்திற்குரியது. எனவே சிவில் சமூகத்தின் பங்கு பிரதானமானது. பாராளுமன்ற ஆசனங்களை நோக்கிய அரசியலைக் கைவிட்டு தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு, பிரதேச அபிவிருத்தி என்பன பேச்சுவார்த்தைகளில் பிரதான பாத்திரத்தை வகிக்க வேண்டும்.

25348366_1967251983315748_3486822198408513877_n-720x450  உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம் 25348366 1967251983315748 3486822198408513877 nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

அவ்வாறானால் இத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது வடக்கில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியமான பாத்திரத்தை வகிக்கலாம் எனக் கருத இடமுண்டு.

இக் கட்சி வடக்கில் பரவலாகவும், கிழக்கில் சில பகுதிகளிலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்துவதைக் காணமுடிகிறது. ஒரே ஒரு பாராளுமன்றஉறுப்பினரைக் கொண்டிருந்த போதிலும் கனதியான பாத்திரத்தை வகித்துள்ளதை இத் தேர்தல் காட்டுகிறது.

அரசியல் அடிப்படைகளிலும் ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கொள்கையில் தொடர்ச்சியாக இயங்குகின்றனர். இதே நிலைக்கே கூட்டமைப்பின் அரசியலும் மாற்றம் பெற்றிருக்கிறது.

எனவே இணைந்து செல்வதற்கு அதிக தடைகள் இல்லை என்றே கருதலாம். இக் கட்சியும் தனித மனித ஆதிக்கத்துடன் தொடர்ந்து செல்ல முடியாது.

இவர்கள் தமது கட்சியின் பெயருக்கு ஏற்றவாறு ஜனநாயத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமது கட்சியையும் ஜனநாயகப்படுத்த வேண்டும். இன்றைய பரந்த தேவை கருதிகடந்த காலத்தில் வாழாமல் தமக்குரிய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய வாய்ப்புகளைத் திறக்க உதவ வேண்டும்.

தற்போது எழுந்துள்ள அரசியல் சூழல் புதிய அரசியலுக்கான களங்களைத் திறந்துள்ளதாலும், தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் இக் கட்சிமீது தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாலும், தனித்து தாம் நம்பும் அரசியலை நிறைவேற்ற முடியாது எனக் கருதி தமிழரசுக் கட்சியுடன் நல்லிணக்கத்திற்குச் செல்வது அவசியமாகவே உள்ளது.

இதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய இக் கட்சி செயற்பட வேண்டும். இதன் ஆரம்பமாக இடதுசாரிக் கருத்துகளோடு செயற்படும் இதர அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆரம்ப இணக்கத்தை இலகுவாக ஏற்படுத்த முடியும்.

கூட்டமைப்பும், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் கூட்டாக செயற்படுமானால் குறைந்த பட்சம் யாழ். மாவட்டத்தில் காத்திரமான அரசியல் மாற்றத்தை ஆரம்பிக்கலாம்.

பிரதேச சபைகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் அதற்கான தொடக்கம் இருக்கலாம். பழைய கசப்புணர்வுகளுக்குப் பழிவாங்கும் களங்களாக மாற்றாமல் புதிய அரசியலைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சகல தரப்பினருக்கும் பொருந்தும்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது இவ் இரண்டு கட்சிகளின் வாக்குப் பலத்தினை இணைத்துப் பார்க்கும் போது யாழ். மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.

அத்துடன் கூட்டமைப்பிற்கு அகில இலங்கை அடிப்படையில் 339675 வாக்குகள் கிடைத்தன. அதில் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 105947 வாக்குகள் கிடைத்தன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வாக்காளர்கள் யாழ். மாவட்டத்தி;ல் உள்ளனர். எனவே யாழ்.மாவட்டத்தின் அரசியல் புதிய பயணத்திற்கான களமாக அமைவதே பொருத்தமானது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மேலும் பல பிரச்சனைகள் எற்பட வாய்ப்பு உண்டு என்பதை தென்னிலங்கை முடிவுகள் உணர்த்துகின்றன.

இந் நிலையில் இப் பிரச்சனைக்கான காத்திரமான தீர்வைப் பெற வேண்டுமெனில் இணைந்து செயற்படுவது அவசியமானது. இத் தேர்தலில் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டியிட்ட பல கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் அரசியல் தீர்வு விடயத்தில் ஈ பி டி பி, கூட்டமைப்பு ஆகியன இணையும் பட்சத்தில் அவையும் இணைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உண்டு.

உதாரணமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சுயேட்சைக் குழுக்கள் என்பன பெரும் அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

தமிழ்ப் பிரதேசங்களில் தற்போது சிங்கள பிரதான அரசியல் கட்சிகளும் ஆழமாகக் காலைப் பதித்துள்ளதை இத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

இதன் ஆதரவாளர்களும் ஐக்கிய இலங்கை அரசியலை ஆதரிப்பது வெளிப்படை. எனவே தமிழ்த் தேசிய அரசியல் 21ம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறான அரசியல் மாற்றத்திற்குள் செல்வதில் பிரதான தடைகள் இல்லை எனலாம்.

இவை யாவும் இக் கட்சிகள் தமிழ் மக்களின் நலன் கருதிக் கட்சி அரசிலிற்கு அப்பால் சிந்தித்தால் மட்டுமே சாத்திமாகும். இந் நிலமை ஏற்படுமானால் குறுகிய காலத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

எனவே தமிழ் அரசியலில் தற்போது அடையாளம் காட்டப்பட்டுள்ள பிரதான அரசியல் கட்சிகளான கூட்டமைப்பு,ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி என்பன இணக்க அரசியல் பாதையில் செல்வதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

vsivalingam@hotmail.com

-வி. சிவலிங்கம்