‘கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்’-முருகேசு சந்திரகுமார்
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்” என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கும் நிலையில், என்னைமீறி கட்சித் தலைமை சந்திரகுமாருடன் பேசியதா, அவ்வாறு ஒருபோதும் இல்லை.
தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்துப் பிழைத்தவர்களை பங்காளிகளாக இணைக்கும் எண்ணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சந்திரகுமாருடன் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யாரின் ஒத்துழைப்பும் இன்றி ஆட்சி அமைக்கும் எனவும் என்னுடன் தன்னை மீறி கட்சி உயர்மட்டங்கள் பேசியிருக்க முடியாது எனவும் சிறிதரன் தெரிவித்தமைக்கு, நான் பதில் கூறுவதைவிட, அவர் தன் கட்சி தலைமைகளை கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் என்னுடன் என்ன பேசினார்கள் என்பதை நான் இப்போது கூற விரும்பவில்லை.
தேர்தல் சட்டதிட்டத்துக்கு அமைவாக கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனித்து ஆட்சி அமைக்க முடியாது. கூட்டுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.
இந்த இரண்டு சபைகளிலும் எம்மை ஆட்சி அமைக்குமாறு எமது அமைப்புக்களும் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நாம் பரிசீலனை செய்கிறோம்.
இதுவரையில் இவ்விடயம் தொடர்பாக நாம் எந்த ஒரு கட்சியுடனும் பேசவில்லை. விரைவில் தீர்க்கமான முடிவொன்றை நாம் அறிவிப்போம்” என தெரிவித்தார்.
இடம்பெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 17 ஆசனங்களையும், சுயேட்சைக்குழு 11 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலா 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன தலா 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 6 ஆசனங்களையும், சுயேட்சைக்குழு 4 ஆசனங்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன தலா 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பூநகரி பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், சுயேட்சை குழு 4 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலா 2 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.