பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பலமாக எழுந்தன.புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்ற தகவல்களும் அப்பப்போது வெளிவந்துகொண்டு இருந்தன.பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, கட்சி உறுப்பினர்கள் என அடுத்தடுத்து இடம்பெற்ற விசேட கூட்டங்களால் கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
இவ்வாறான இக்கட்டான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பை அலரி மாளிகையில் நடத்திவருகின்றார்.
இதில் கருத்து தெரிவித்த பிரதமர்;
‘2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். நான் பதவிவிலகப் போவதில்லை.அப்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
19ஆவது திருத்தச்சட்டத்தின் படி பிரதமரை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறு பதவி விலக்க வேண்டுமானால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்.அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அதற்கு முகம்கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் கூறினோம். அவர்களது கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் பிரிந்து செல்லவில்லை. நல்லாட்சி தொடரும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.