கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாக்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.
தமிழக அரசு சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. கட்சி விழாவா? அரசு விழாவா? என்று தெரியாத அளவுக்கு பிரமாண்ட அளவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. குறிப்பாக, அரசு சார்பில் நடத்தப்படுவதாகத்தான் தம்பட்டம் அடித்து இந்த விழா கொண்டாடப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் இந்த விழாவுக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்தான் தலைமைத் தாங்கினார்.
கோவையில் ரகு என்ற இளைஞர், உதகையில் பாபு என்ற தொழிலாளி இந்த விழாக்களினால் பலியானார்கள். இதனால், இதற்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ், கடந்த 2016 மற்றும் 17 ஆண்டுகளில், அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாக்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டறிந்தார்.
இதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை பதிலளித்துள்ளது. இதில், விழாக்களின் பட்டியலை கொடுத்து அரசு, அதற்கான செலவினங்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்படவில்லை. செலவுகள் குறித்த விவரங்களை, தகவல் பெறும் சட்டத்தில் பெற முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களின் பட்டியலைப் பொறுத்தவரை, பாரதியார், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, திருப்பூர் குமரன், காந்தி, பெரியார் உள்ளிட்ட பலருக்கு அரசு சார்பில் விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில், சுமார் 60 விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளநிலையில், கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து டேனியல் கூறுகையில், “ஒவ்வொரு மாவட்டத்திலுமே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாகத்தான் கொண்டாடப்பட்டது. கோவையில் மட்டுமே, கோடிக்கணக்கில் பணம் இறைக்கப்பட்டது. அந்த செலவினங்கள் குறித்த விவரங்கள் வெளிவந்தால், மிகப்பெரிய எதிர்ப்புகள் எழும் என்பதற்காகவே, அரசு இதை மறைக்கப் பார்க்கிறது” என்றார்.