கரூரில் வைரலாகும் பேருந்துக் கட்டண உயர்வைக் கிண்டலடிக்கும் பேனர்..!

பயணிப்பீர் பாதுகாப்புடன், குறைவானக் கட்டணத்தில் நிறைவானப் பயணம். குறைந்தக் கட்டணத்தில் சுகமானப் பயணம்” என்ற வாசங்களுடன் பேருந்துக் கட்டண உயர்வைக் கிண்டலடிக்கும் விதமாக கரூரில் ரயில் பயணத்தைப் பற்றிய சிலாகிப்புடன் ஆட்டோ ஒன்றில் கட்டப்பட்டிருக்கும் பேனர் கரூர் மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது. இதனால், பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் மாநிலம் முழுக்கப் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், சொற்ப அளவை மட்டும் குறைத்த தமிழக அரசு, பழைய பேருந்துக் கட்டணத்திற்கு  கொண்டு வரவில்லை. இதைக் காரணம் காட்டி, இன்றும் ஏதோ ஒரு அமைப்பு, ‘பேருந்துக் கட்டணத்தை பழைய நிலைக்கே திரும்பப் பெற வேண்டும்’ என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கரூரில் ஒரு ஆட்டோவில் ரயில் பயணத்தை சிலாகித்து, அதன் கட்டண விபரங்களோடு கட்டப்பட்டிருக்கும் ப்ளக்ஸ் ஒன்று ஏக வைரலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘குறைந்தக் கட்டணத்தில் சுகமான பயணம்; பயணிப்பீர் பாதுகாப்புடன்; குறைவான கட்டணம் நிறைவான பயணம்’ போன்ற வாசகங்களுடன் இருக்கும் அந்த பேனரில்,கரூரிலிருந்து ஈரோட்டிற்கு 20, சேலத்திற்கு 25 ரூபாய், மதுரைக்கு 30 ரூபாய், திருச்சிக்கு 20 ரூபாய், கோவைக்கு 35 ரூபாய், சென்னைக்கு 130 ரூபாய் மட்டுமே என்று பேருந்துக் கட்டண உயர்வைக் குத்திக்காட்டும் விதமாக ரேட் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. அதோடு, கரூரில் இருந்து மேற்சொன்ன ஊர்களுக்கெல்லாம் எந்தந்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றத் தகவலும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கரூர் மாவட்ட பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.