காதலித்து திருமணம் செய்துகொண்ட திருப்பூர் பெண், வங்கதேசத்தில் இறந்துவிட்டதாக வந்த தகவல், அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் – செல்வகோமதி தம்பதியரின் மகள் பூரணாதேவி. 19 வயதான இவர், கடந்த 2016-ம் ஆண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி, தன்னுடன் பின்னலாடை நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிந்த ரிமுஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தங்களின் மகள் காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் அப்போது புகார் அளித்த அவரது பெற்றோர், பின்னர் திருமணமான தகவலை அறிந்ததும் புகாரை திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.
திருமணமான பூரணா தேவியும் – ரிமுஷேக்கும் கொல்கத்தாவில் குடியேறியதாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து திருப்பூரில் உள்ள பெற்றோருடன் தினந்தோறும் செல்போனில் பேசி வந்துள்ளார் பூரணாதேவி. இந்நிலையில், திருமணமான ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் வங்கதேசத்தில் வசிப்பதாக சமீபத்தில் பூரணாதேவி தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதியன்று இரவு 10 மணிக்கு பூரணாதேவியின் பெற்றோருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், உங்கள் மகள் பூரணாதேவி இறந்துபோய்விட்டாள் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பூரணாதேவியின் பெற்றோர் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்திருக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்த பெற்றோர், “தங்களின் மகள் பூரணாதேவி மரணமடைந்து விட்டதாக வந்த தகவலைப் பற்றியும், ரிமுஷேக் என் மகளை தவறான நோக்கத்துக்காக அவர் கடத்தி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து என் மகளை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் மனு அளித்திருக்கிறார்.