பாம்புகளின் பாதுகாவலர் சாலை விபத்தில் பலி!

சாலை விபத்தில் நெல்லையைச் சேர்ந்த பாம்புகளின் பாதுகாவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து வனப் பகுதியில் விட்ட அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாம்புகளின் பாதுகாவலர்

பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் வசிக்கும் அந்தோணி சேவியர் என்பவரின் மகன் நவீன் ஜோசப். பொறியியல் பட்டதாரியான இவர், கேரளாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகிறார். நவீன் ஜோசப்பின் தாத்தா ராஜேந்திரன், பாம்புகளைப் பிடிப்பதிலும், பாம்பு குறித்து பொதுமக்களின் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக சொந்தமாக பாம்புப் பண்ணை நடத்தி மக்களிடம் பாம்புகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார். அவரைப் போலவே நவீன் ஜோசப்பும் பாம்புகள் மீது தீராதக் காதல் கொண்டிருந்தார்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதியிகளில் பாம்பு நுழைந்து விட்டால், நவீன் ஜோசப் செல்போன் அலறும். நள்ளிரவாக இருந்தாலும் கூட எந்தச் சோர்வும் இல்லாமல் சொந்தக் காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் சென்று பதுங்கிக் கிடக்கும் பாம்பைப் பிடித்து, கையோடு எடுத்துச் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டுச் செல்வது இவரது வழக்கம். இதுவரையிலும் ஆயிரத்துக்கும் அதிகமானப் பாம்புகளை இவர் பிடித்துள்ளார்.

கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் வகைப் பாம்புகளையும் சுலமபாகப் பிடிப்பதிலும் அச்சமின்றி செயல்பட்டு வந்தார்.  அதனால்  வனத்துறையினரும் இவரது உதவியுடன் பல இடங்களில் ராஜநாகம் உள்ளிட்ட பல கொடிய விஷப் பாம்புகளைப் பிடித்து இருக்கிறார்கள்.  நவீன் ஜோசப்புக்கு பாம்புகள் மீது மட்டும் அல்லாமல் அனைத்து வகையான உயிரினங்கள் மீதும் அலாதி பிரியம் இருந்தது. பறவைகள் குறித்தும் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனங்களைக் காப்பது உள்ளிட்டவற்றிலும் அவர் அக்கறையோடு செயல்பட்டு வந்தார். அதனால் தேசிய இயற்கை பாதுகாப்புப் படை என்ற அமைப்பை உருவாக்கி, இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் உயிரினங்கள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தார். பறவைகள் கணக்கெடுப்பு, விலங்குகள் கணக்கெடுப்பு போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உயிரினங்கள் குறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

ராஜநாகம்

சொந்த வேலையாக குடும்பத்துடன் காரில் சென்னை சென்ற அவர், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அவரது மனைவி அகிலாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். காரை டிரைவர் முகேஷ் ஓட்டியுள்ளார். இவர்கள் சென்ற கார் திருவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நவீன் ஜோசப், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி அகிலாவும் டிரைவர் முகேஷும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நவீன் ஜோசப் உடல், பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் பிரார்த்தனைக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. பாம்புகள் மீதும் வன உயிரினங்கள் மீது அதிக அக்கறை கொண்டு செயலாற்றி வந்த நவீன் ஜோசப் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.