இறந்த மகனின் செல்களிலிருந்து, பேரக் குழந்தைகளை பெற்ற தம்பதி..

புனேயைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பிரதாமேஷ் மேல்படிப்புக்காக 2010-ம் ஆண்டு ஜெர்மனி சென்றார். அவர் படித்து கொண்டிருக்கும் போது மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெர்மனியில் கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கு முன் பிரதாமேஷின் விந்து செல்கள்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. சிகிச்சைக்கு பிறகு அவர் பார்வையை இழந்தார்.

அதன் பின் இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதாமேஷ் மரணமடைந்தார். இது பிரதாமேஷ் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருமணம் ஆகாமல் இறந்து போன தனது மகனின் செல்கள் மூலம் பேரக்குழந்தைகளை பெற வாலிபரின் பெற்றோர்கள் விரும்பினர்.

இது குறித்து ஜெர்மனி மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசி வாலிபரின் விந்து செல்களை பெற்றனர். பின்னர் செயற்கை கருவூட்டலுக்காக புனேயில் உள்ள மருத்துவமனையை அணுகினர். அங்கு, வாலிபரின் விந்து செல்களுடன் தானமான பெற்ற கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு உயிர் வளர்க்கப்பட்டது. பின்னர், அது வாலிபரின் உறவுக்காரப் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டது.

அந்த கரு ஆரோக்கியமாக வளர்ந்த நிலையில், அந்த பெண்ணிற்கு கடந்த திங்கட்கிழமை இரட்டை குழந்தைகள் பிறந்தன. தன் மகன் திரும்ப கிடைத்து விட்டதாக பிரதாமேஷின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.