தமிழகத்தில் காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிப்பாண்டி-பேச்சியம்மாள்.
இவர்களுக்கு சித்திராதேவி(14) என்ற மகள் உள்ளார். அவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன்(23), இந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு வரும் போது தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக அங்கிருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தன்னை காவல்நிலையம் வரை அழைத்துச் சென்றுவிட்டதால் பாலமுருகன் அவர்கள் குடும்பத்தின் மீது, அந்த மாணவி மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
நேற்று முன் தினம் காதலர் தினம் என்பதால், பாலமுருகன் மீண்டும் மாணவியிடம் சென்று காதலை தெரிவித்துள்ளார். அப்போதும் மாணவி மறுத்துவிட்டதால் திரும்பிச் சென்றுள்ளார்.
இன்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அந்த மாணவி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
உடலில் தீ பற்றி எரிய, வேதனை தாங்கமுடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார். பாதி உடல் எரிந்த போது, அவ்வழியாக வந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக தீயை அணைத்து, சிறுமியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.