சென்னை அருகே கொள்ளையர்களால் தாக்குதலுக்கு ஆளான பெண் பொறியாளர், தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது என்று அழுதவாறே வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா(26), இவர் நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை, அவர் பணிமுடிந்து பெரும்பாக்கம் தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த வழிப்பறி கும்பல், லாவண்யாவை வழிமறித்து சாலையோர முட்புதருக்குள் தூக்கிச்சென்று, இரும்புக் கம்பியால் கொடூரமாக தலையில் தாக்கியுள்ளனர்.
மயங்கி விழுந்த லாவண்யாவிடம் இருந்து நகைகள், கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ரோந்து பொலிசார் லாவண்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், செம்மஞ்சேரியில் உள்ள மதுபான கடையில் நின்றுக் கொண்டிருந்த லாவண்யாவின் இருசக்கர வாகனத்தை பொலிசார் மீட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது. இதனைத் தொடர்ந்து, அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அச்சம்பவம் குறித்து கூறுகையில், என்னை இரும்பு கம்பியால் தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது, அவர்கள் மனிதநேயமற்றவர்கள், எனக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.
இந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.