கணவரின் கண்முன்னே பலியான இளம்பெண்..

ஹரியானா மாநிலத்தில், ‘Go Kart’ எனும் கார்பந்தயத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர், தனது கணவரின் கண்முன்பே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ராம்புரா புல் பகுதியைச் சேர்ந்தவர் அமர்தீப் சிங், இவருக்கு புனித் கவுர் எனும் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தங்கள் குடும்பத்தினருடன் ஹரியானா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பூங்கா ஒன்றிற்கு சென்ற போது, ‘Go Kart’ எனும் சிறிய ரக கார் பந்தய விளையாட்டில் ஈடுபட்டனர்.

புனித் கவுரும், அவரது கணவரும் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொள்ள, அவர்களது மகன் பாட்டியுடன் பின் பகுதியில் அமர்ந்து கொண்டான். மேலும், அவர்களது உறவினர்களும் ஆளுக்கொரு காரில் ஏறிக்கொள்ள, பந்தயம் தொடங்கியது.

கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியாத புனித் கவுரின் தலைமுடி, காரின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டது. அதன் பின், நொடிப்பொழுதில் அவரின் மண்டைத் தோலோடு தலைமுடி முழுவதும், துண்டாகத் தனியே போய் விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமர்தீப் சிங், காரை நிறுத்திவிட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு புனித் கவுரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பூங்காவின் ‘Go Kart’ பகுதி உடனடியாக மூடப்பட்டுள்ளது, இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.