நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்!!

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது.இந்நிலையில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

கட்சியின் இளம் உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை புரிந்து கொண்டு செயற்படுமாறு பிரதமர் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எதிர்க்கட்சிக்கு செல்வதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யப்படவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்த இளம் உறுப்பினர்களை சமாதானப்படுத்திய பிரதமர், அமைதி நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமகால நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒத்துழைப்பை வழங்குமாறு சில வெளிநாட்டு தூதரகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.