இந்தியாவின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு அளவும், 2017 ஆம் ஆண்டு கடைசி காலாண்டில் இந்த வங்கிக்கு கிடைத்த லாபத்தின் 50 மடங்குமாக இந்த தொகை இருப்பது குறிப்பிடத்தக்கது.
சில வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்தும் வகையில் நிதி மோசடி பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக இந்த வங்கி தெரிவித்திருக்கிறது.
பிற வங்கிகளையும் இந்த மோசடி பரிமாற்றம் பாதிக்கலாம் என்று கவலைகள் எழுந்துள்ளதால், இந்திய வங்கி வட்டாரத்தில் இது நம்பகதன்மைக்கு இது பேரிடியாகியுள்ளது.
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
1. கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன் பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக கூறப்படுகிறது.
2.இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம் வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம் (letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
3. இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள் கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப் பணத்தை வங்கி வசூலிக்கும்.
4. ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின் நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும் போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
5.இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு செய்துள்ளன.
6. இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு செய்துள்ளனர்.
கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர் விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள் பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான் ஸ்விஃப்ட்.
7. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட் அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக் கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள் சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கடன் அளித்துள்ளன.
8.”நோஸ்டிரோ அக்கவுண்ட்” என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு இந்த தொகை வந்துள்ளது.
இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின் வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம் சென்றுள்ளது.
9.இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை மறுசுழற்சி செய்துள்ளனர்.
10.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது.
இதில் ஏமாற்று வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி, உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே தெரிய வந்தது.