சசிகலா குடும்பத்துக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
`தென்மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் சமூகரீதியான செல்வாக்கை தினகரன் பெறுவதை பன்னீர்செல்வம் ரசிக்கவில்லை. இதன் எதிரொலியாகத்தான் தேனி கூட்டத்தில் மனம் திறந்து பேசினார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசும்போது, ‘நான் கட்சிப் பணிக்கு வரும்போது, டி.டி.வி.தினகரன் கைப்பிள்ளையாக இருந்தார். அவர் ஒரு எல்.கே.ஜி ஸ்டூடன்ட். `மீண்டும் என்னை டீக்கடையில் அமர வைப்பேன்’ என தினகரன் பேசி வருகிறார்.
`தேர்தலில் தோற்கடித்து கட்டிய உடையோடு அனுப்பி வைப்பேன்’ என எச்சரித்தார் சசிகலா. அந்தக் குடும்பத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிக்கு வேறு யாராக இருந்தாலும் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள் அல்லது கட்சியைவிட்டே ஓடியிருப்பார்கள். அணிகள் இணைவதற்கு முன், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன்.
அவர் என்னிடம் பேசும்போது, `இப்போது இருக்கும் சூழலில் இரு அணிகளும் இணைய வேண்டும்; கட்சியைக் காப்பாற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
நானும், ‘எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ எனக் கூறினேன். அவரோ, ‘நீங்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும்’ என்றார். அதன் காரணமாகவே தற்போது அமைச்சரவையில் இருக்கிறேன்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மூன்று தொகுதிகளுக்கும் நான்தான் செலவு செய்தேன்.
அ.தி.மு.க-வை 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் மறைமுகமாக இயக்கினார்கள். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால், எனக்கு துரோகி எனப் பட்டம் சூட்டினர்” என நேரடியாகத் தாக்கிப் பேசினார்.
சசிகலா“தர்மயுத்தத்தைத் தொடங்கிய நாள்களில், தினகரனுக்கு எதிராகப் பன்னீர்செல்வம் பேசினாலும், இப்போது நேரடியாகத் தாக்குவதற்குப் பின்னணியில் சில விஷயங்கள் இருக்கின்றன” என விவரித்த தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “அரசியல்ரீதியாக முன்னேறுவதைவிட சமூகரீதியான பலத்தைப் பெறுவதில்தான் துணை முதல்வர் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன் ஒரு துளிதான் நேற்றைய பேச்சு. இணைப்பு முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோது, கட்சிப் பதவிக்குத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பினார் பன்னீர்செல்வம். ‘கட்சிக் கட்டுப்பாடு கைக்குள் வந்துவிட்டால், அரசியல்ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்’ என நினைத்தார்.
ஆனால், முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்த பிறகு, ‘அவரும் தலைவராக முயற்சி செய்கிறார்’ என்பதை பன்னீர்செல்வம் புரிந்துகொண்டார்.
‘எடப்பாடி பழனிசாமி உறவில் விரிசல் வந்துவிட்டால், நிலைமை மேலும் சிக்கலாகிவிடும்’ என்பதையும் அறிந்தே வைத்திருந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்த பிறகு, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார்.
அதேபோல், அரசு அலுவல்ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளைப் பற்றியும் பன்னீர்செல்வத்துடன் விவாதித்துவிட்டே முடிவு செய்கிறார் முதல்வர்.
‘அண்ணே… இப்படிச் செய்தால் சரிப்பட்டு வருமா எனக் கேட்டுத்தான் செயல்படுகிறார். ‘இவர்களுக்குள் விரிசல் வந்தால் மட்டுமே ஆட்சிக்குச் சிக்கல்’ என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
எடப்பாடியைப் பொறுத்தவரையில், ‘ஓ.பி.எஸ் நமக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருப்பார்’ என நம்புகிறார்” என்றவர்,
தினகரன்”தினகரனின் முயற்சிகள் எதுவும் நடக்கப்போவதில்லை. ‘கட்சியாகப் பதிவு செய்துவிட்டு சின்னத்தைக் கேளுங்கள்’ எனக் கூறிவிட்டது தேர்தல் ஆணையம்.
இப்படி நடக்கும் என்பதை அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் தெரிந்தே வைத்திருந்தனர். பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் அனைத்துத் தேர்வுகளும் முடிந்துவிடும்.
இதன்பிறகு, மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப்போல, ‘உள்ளாட்சியிலும் சமூகரீதியாக வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது’ என நினைக்கிறார் பன்னீர்செல்வம்.
அதற்கு முன்னோட்டமாகத்தான் தேனியில் பேசினார். சசிகலாவை சாதியின் மொத்த அடையாளமாகச் சொந்த சமூகத்தினர் பார்க்கிறார்கள்.
இதே அடையாளத்துடன்தான் தினகரனும் வந்து நிற்கிறார். திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டிருந்த நாள்களில், நாஞ்சில் சம்பத் பேசிய கூட்டங்களுக்குக் கூடிய கூட்டத்தில் பெரும் பகுதியினர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.
‘தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தூண்டியது இவர்கள்தான்’ எனப் பேசுவதன் மூலம், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தைப் பகிரங்கப்படுத்துகிறார்.
‘முதல்வர் பதவியில் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர்’ எனத் தன்னுடைய சொந்த சமூகத்துக்கும் தகவல் சொல்கிறார் பன்னீர்செல்வம்.
இப்படி வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், அரசியல் களத்தில் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார். சமூகங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை அதிகரிக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
‘முக்குலத்தோர் அடையாளமாகத் தினகரன் வந்துவிடக் கூடாது’ என்ற அச்சம்தான் பிரதான காரணம். தற்போது டெல்டா பகுதிகளில் சமுதாயத்தின் பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு வருகிறார் தினகரன்.
‘நாம் முன்னிறுத்தப்படக் கூடாது என்பதற்காக, நமக்கான தொகுதிகளையும் அபகரித்தது இந்தக் குடும்பம்தான்’ எனச் சமூகத்து மக்கள் மத்தியில் பேசி வருகிறார் பன்னீர்செல்வம்.
உள்ளாட்சியில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களிலும் இதே வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சசிகலா குடும்பத்தின் ஆட்டம் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் துணை முதல்வர்” என்றார் விரிவாக.