ஓடையில் உயிரை விட்ட இளைஞர்..

பிலியந்தலையில் நீரோடையில் குதித்து உயிரிழந்த வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை, கஹதுடுவையில் ஹெரலியவலை பகுதியில் போதை மருந்து பாவனை மற்றும் வினியோகம் இருப்பதாகச் சந்தேகித்த பொலிஸார், நேற்று (16) அங்கு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, இரண்டு கிராம் ஹெரோயினைக் கைவசம் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

அப்போது, மற்றொரு இளைஞரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அவரை விசாரிக்க முயற்சி செய்தனர்.

தன்னை நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர்கள் வருவதைக் கண்டு கிலிகொண்ட அந்த இளைஞர் ஓடிச் சென்று அருகில் இருந்த நீரோடை ஒன்றினுள் குதித்தார். எனினும் உடனடியாக அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, அவ்விளைஞன் மரணித்திருக்கலாம் என்றும் அதற்கு பொலிஸாரின் நடவடிக்கையே காரணம் என்றும் அப்பகுதிவாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று (17) காலை ஏழு மணியளவில், குறித்த இளைஞரின் உயிரற்ற உடல் நீரோடையில் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.