கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்கடை நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் அடித்தே கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் புதுக்கடை நீதிமன்றை அண்மித்துள்ள நூரானியா வீதியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது, புதுக்கடை நூரானியா பகுதியை சேர்ந்த 39 வயதுடைய றிஸ்வான் என அறியப்படும் வர்த்தகர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது துப்பாககி குண்டுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் நூரானிய வீதியூடாக பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஓடியுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியுள்ள துப்பாக்கி தாரி, நூரானியா வீதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரை பிந்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார்.
இதன்போதே பொது மக்கள் துப்பககிதாரியை பிடித்து கடும் தககுதல் நடத்தியுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நபர் தப்பியோடியுள்ளார்.
சம்பவத்தினையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்வரும், துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியவரும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள போதும் அங்கு வைத்து அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், முன்னாள் பாதாள உலக தலைவர்களில் ஒருவராக் கூறப்படும் குடு நூர் என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் அவர், வர்த்தகர் எனவும் கூறப்படுகின்றது.
அவருக்கு உயிர் அச்சுறுத்தல் சில நாட்களாக இருந்ததாக கூறப்படும் நிலையில், துப்பககிச் சூட்டை நடத்தியோரின் பின் புலம் தொடர்பில் நேற்று மாலை உடனடியாக் அதெரியவில்லை.